மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமா? தேர்தல் கமிஷனுக்கு பாய்ந்த கேள்விகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 8:50 pm

மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமா? தேர்தல் கமிஷனுக்கு பாய்ந்த கேள்விகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என தெரிந்துவிடும்.

இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ண இருந்த நிலையில், இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறியதாவது, மின்னணு வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் இயக்குநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.

இதனால் நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதுவும் தற்போது உள்ள நடைமுறைப்படி ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் வாக்குச்சீட்டு முறைகே திரும்பி விட்டன.

எனவே, ஒரு தொகுதியில் 100 EVM இயந்திரங்கள் பயப்படுத்தப்டுகிறது என்றால் அதில் வெறும் 2% ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றது.

இதனால் ஒப்புகை சீட்டை 100% சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் இருப்பதால் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் எனவும் வழக்கறிஞர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 3 விவிப்பேடுகளும் இணைக்கப்படுகின்றனவா?, இவிஎம் இயந்திரம் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால் ஒப்புகை சீட்டுகளை எண்ணும்படி வேட்பாளர்கள் கேட்கலாம். இந்தியாவில் முன்பு 50 முதல் 60 கோடி என்ற அளவில் தான் வாக்காளர்கள் இருந்தனர்.

தற்போது 97 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றார்கள். இதனால், வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டுவந்தால் அத்தனை வாக்குகளையும் எப்போது எண்ணி முடிப்பது. மனித தலையீடு இல்லாமல் இயந்திர முறையில் பெரும்பாலும் சரியான முடிவுகள் இருக்கின்றன.

மனிதர்களின் தலையீடு எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கும். இதனால் மீண்டும் வாக்குசீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது என தெரிவித்தனர்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளையும் எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 292

    0

    0