நடிகர் விஜய் இன்னொரு ரஜினியா?திரைமறைவில் மிரட்டும் கட்சிகள்!
Author: Udayachandran RadhaKrishnan6 November 2023, 9:20 pm
நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?… என்ற கேள்வி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அவருடைய ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் பலத்த எதிர்ப்பார்ப்புடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு, விஜய் விரைவில் அரசியலில் குதிப்பார், தனி கட்சி தொடங்கி தேர்தலையும் சந்திப்பார், 2026ல் தமிழகத்தின் முதலமைச்சர் அவர்தான் என்று அவருடைய தீவிர ரசிகர்கள் அவ்வப்போது மதுரை திருச்சி,நெல்லை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் பிரமாண்ட
வால்போஸ்டர்களை அச்சிட்டு அதை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஒட்டி மகிழ்ச்சி அடைவதையும், பரபரப்பு ஏற்படுத்துவதையும் காண முடிகிறது.
மக்கள் சேவையில் விஜய் மக்கள் இயக்கம்!
அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் 200க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு இந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறிவிட்டது.
கடந்த ஜூன் மாதம் விஜய் தனது பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளையும் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சென்னைக்கு வரவழைத்து பாராட்டு விழா நடத்தி பரிசுப் பொருள் வழங்கி கௌரவ படுத்தியதுடன் அவர்கள் மத்தியில் பணத்திற்காக வாக்களிக்காதீர்கள் என்ற முக்கிய வேண்டுகோளையும் வைத்தார். இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய ரசிகர்கள் அடித்துக்கூற ஆரம்பித்து விட்டனர்.
ஏனென்றால் 234 தொகுதிகளை குறி வைத்ததே தேர்தலுக்கு போடும் அஸ்திவாரம்தான் என்றும் கூறப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறும்போது, “நமது இயக்க நிர்வாகிகள் சமூக வலைத் தளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும்” என்று அறிவுறுத்தி இருந்தார்.
இதுவும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன்பு பார்க்கும் வெள்ளோட்டம் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா சந்திப்பில் நடிகர் விஜய் தன் ரசிகர்கள் மத்தியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, “நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறியது, முயலை வீழ்த்தியதைவிட யானையை வீழ்த்த வேண்டும் எனச் சொன்னது, புரட்சித் தலைவர்னா, ஒருத்தர்தான். நடிகர் திலகம், புரட்சிக் கலைஞர், உலக நாயகன், சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான். அதே மாதிரி, ‘தல’ன்னா ஒருவர்தான், ‘தளபதி’ன்னா உங்களுக்கே தெரியும். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கதான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க, நான் செய்துவிட்டு போகிறேன்” என்று பேசியதை வைத்து விஜய் அரசியலுக்கு வர இருப்பதைத்தான் இப்படி சொல்கிறார் என அவருடைய ரசிகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
போதாக்குறைக்கு இந்த விழாவில் நடிகர் அர்ஜுன் பேசும்போது, “அரசியலுக்கு வருவதற்கான எல்லாத் தகுதியும் விஜய் கிட்ட இருக்கிறது. சீக்கிரமே அவர் அரசியலுக்கு வருவார்” என்று ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார்.
இப்படி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு யூகங்கள் கிளப்பி விடப்பட்டாலும் இதுவரை நேரடியாக நான் அரசியலுக்கு வருவேன், கட்சி தொடங்குவேன் என்று எங்குமே அவர் குறிப்பிடவில்லை.
“தமிழகத்தில் தனக்கு இருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் மூலம் விஜய்யால் எளிதில் அரசியல் கட்சியை தொடங்கி விட முடியும் என்றாலும் கூட 2026ல் அவர் கட்சி தொடங்கவோ அல்லது அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தினர் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடவோ மாட்டார்கள்” என்று விஜய்க்கு நெருக்கமான கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் சிலர் கூறுகின்றனர்.
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் விழுந்துள்ளது, அதை நிரப்புவதற்காக நான் வருவேன். கட்சி தொடங்கி என்னை வாழ வைத்த தமிழகத்தின் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றி சேவை செய்வேன். 2021 தமிழக தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2017ம் ஆண்டு முதலே ஆவேசமாக முழங்கி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்டு அரசியலே வேண்டாம் என்று 2020 டிசம்பர் மாதம் தன் உடல் நலத்தை காரணம் காட்டி ஒரு பெரிய கும்பிடாக போட்டு விட்டு ஒதுங்கிக்கொண்டார்.
அவர் ஏற்கனவே தனது திரைப்படங்களில் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் அனைத்தும் பொய்யாகிப் போனதை இன்று வரை அவருடைய ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அப்போது உடல் நலம் சரியில்லை என்று ரஜினி ஒதுங்கினாலும் கூட அதன் பின்னணியில் அவர் ஒரு அரசியல் கட்சியாலும், ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தாலும் தனிப்பட்ட முறையில் மறைமுகமாக மிரட்டப்பட்டார் என்பதுதான் உண்மை.
அதற்கு பயந்துதான் தனி கட்சியும் வேணாம், தேர்தலும் வேணாம்…ஆளை விடுங்கப்பா என்று நடிகர் ரஜினி ஒரேடியாக ஓட்டம் பிடித்து விட்டார். ஆனால் அதன் பிறகு அதே உடல் நலக்குறைவுடன் புத்திசாலித்தனமாக இரண்டு படங்களில் நடித்து சில நூறு கோடி ரூபாய்களை ரஜினி சம்பாதித்து விட்டார் என்பதும் நிஜம்.
இதே போன்ற திரை மறைவு எதிர்ப்பைத்தான் நடிகர் விஜய்யும் இன்று சந்தித்து வருகிறார். மறைமுகமாகவும் மிரட்டப்படுகிறார்.
234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்திய அன்று விஜய் பேசியது பற்றி கருத்து தெரிவித்த தமிழக அரசியல் கட்சி தலைவர் ஒருவர், “சினிமாவில் மார்க்கெட் இழக்கும் நேரத்தில் சிலர் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். மற்ற மாநிலங்களில் திரைப்பட பிரபலங்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட சாபக்கேடுகள் எல்லாம் நடக்கிறது” என்று பொங்கி இருந்தார்.
இதுவே அவருக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கைதான். இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிட்டால் அதனால் முதலில் பெரும் பாதிப்பை சந்திப்பது அந்தக் கட்சியும், அதன் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியும்தான் என்பது அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஏனென்றால் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் வாக்குகளை விஜய்யின் கட்சி அப்படியே அள்ளிவிட்டால் மிரட்டல் விடுத்த தலைவரின் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும்தான் தேர்தலில் பெரிய இழப்பு ஏற்படும். இது நடிகர் விஜய்க்கும் நன்றாகவே தெரியும்.
இதனால் அவர் தனது ரசிகர்கள், ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுயேச்சைகளாக போட்டியிடக்கூடிய அளவில் மட்டுமே 2026 தேர்தலை சந்திக்க அனுமதிப்பார். தவிர
தனிக்கட்சி தொடங்கினால், தேர்தலுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியும் இருக்கும். கையில் உள்ள பணத்தை அவர் இழக்கவும் விரும்பமாட்டார்.
தற்போது விஜய்க்கு 49 வயதுதான் ஆகிறது. அவரால் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு சுறுசுறுப்பான ஹீரோவாக நடிக்க முடியும். அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை அவரால் சம்பாதித்து விடவும் முடியும்.
எனவே ரஜினி எடுத்தது போன்ற முடிவையே விஜய்யும் எடுப்பார். தவிர அதிரடி அரசியல் நடத்துவது, ஆவேசமாக வசனம் பேசுவது எல்லாம் அவருடைய சினிமாக் காட்சிகளில் மட்டுமே இருக்கும். மற்றபடி நிஜ வாழ்க்கையில் துணிச்சலுடன், தைரியமாக அவர் அரசியல் கட்சி தொடங்கி அசத்துவாரா என்பதெல்லாம் சந்தேகம்தான்.
எனினும் ஒரேயொரு வாய்ப்பு மட்டும் விஜய்க்கு உண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரை மிரட்டும் கட்சியும், அதன் கூட்டணியும் படுதோல்வியை சந்தித்தால் 2025க்கு முன்பாக தனிக்கட்சி தொடங்கி 2026ல் தமிழகத் தேர்தலை அவர் எதிர்கொள்ளலாம். ஆனால் இது அவ்வளவு எளிதில் நடந்துவிடும் என்று சொல்ல முடியாது”என அந்த கோலிவுட் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்லும் காரணங்களும் யோசிக்க வைப்பதாகவே உள்ளது!
அப்ப வரும் ஆனா வராது கதை தானா?..