இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனை ஓரங்கட்டுகிறதா பிசிசிஐ? கொதித்த ரசிகர்கள்… கிழித்தெடுத்த காங்கிரஸ் எம்பி!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 6:44 pm
Quick Share

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.

இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது.

இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து அணியோடு தற்போது விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.

அதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடர் முழுவதுமே அணியில் இடம்பெற்றிந்த சஞ்சு சாம்சனுக்கு ஆடும் 11-ல் இடம் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெற்ற சாம்சன் அந்த போட்டியில் முக்கிய கட்டத்தில் 36 என்ற சீரான ரன்கள் குவித்தார்.

2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார்.


இதையடுத்து ரசிகர்கள் அணியில் இருந்து ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.

இதற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், பண்ட் 4வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார் எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர், அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10ல் சரியாக ஆட வில்லை.

சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார் ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எண்ணிக்கையை பாருங்கள் (ரன்கள், சராசரி, ஸ்டிரைக்ரேட்) என கூறி உள்ளார்.

அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடந்து மோசமாக ஆடியும் அணியில் அவருக்கு இடம் தொடர்ந்து இடம் வழங்கப்படுகிறது. ஆனால் சாம்சன் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக ஆடியும் அவருக்கு அணியில் இடம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

இதனை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேசிரியா சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் பிசிசிஐ நிர்வாகம் முடித்து விடும் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ” 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அம்பத்தி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்தார். ஆனாலும் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதே போன்ற ஒரு நிலைக்கு தான் சாம்சனையும் பிசிசிஐ நிர்பந்திப்பது போல் தெரிகிறது. சாம்சன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக ஆடி உள்ள 11 போட்டிகளில் சராசரியாக 60 வைத்திருக்கிறார். இருப்பினும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிப்பது அவரது கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரலாம்” என்று கூறியுள்ளார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 351

    1

    0