காங்கிரஸ் வெற்றியால் திமுக அரசுக்கு சிக்கலா?… மேகதாது அணைக்கு ரூ.9000 கோடி!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2023, 7:26 pm
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
காங்கிரசுக்கு காத்திருக்கும் சவால்கள்
அறுதி பெரும்பான்மைக்கு தேவையான113 உறுப்பினர்கள் என்ற இலக்கையும் கடந்து காங்கிரஸ் மேலும் 23 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. அதேநேரம் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவுக்கு 65 தொகுதிகள்தான் கிடைத்துள்ளன. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.
இனி யாருடைய தயவும் உங்களுக்கு வேண்டியதில்லை என்று வாக்காளர்கள் காங்கிரஸுக்கு நிம்மதி அளித்தாலும் அக் கட்சிக்கு வேறு வடிவில் பல சவால்கள் காத்து இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
ஏனென்றால் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல வாக்காளர்கள் பணப்பயன் பெறும் வகையில் 20க்கும் மேற்பட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் இந்த தேர்தலுக்காக அள்ளித் தெளித்து இருந்தனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இதில் தோற்றுப் போனால் காங்கிரஸுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதே சிக்கலாகிவிடும், எதிர்க்கட்சி முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், சந்திரசேகர ராவ், ஸ்டாலின், கெஜ்ரிவால் ஆகியோரின் பேச்சை கேட்டு நடக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிடும் என்று கருதியோ என்னவோ இதுவரை எந்த மாநிலத்திலும் தேர்தலில் அறிவிக்காத வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியது.
அதனால்தான் காங்கிரசின் இந்த அபார வெற்றியை பிரதமர் மோடி பாராட்டும் போது, “மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனினும், “காங்கிரசின் வெற்றிகள் இனி வரும் தேர்தல்களிலும் தொடரும்” என்று ராகுல் காந்தி பெருமைப்பட்டு இருக்கிறார்.
40% கமிஷன் காரணமா?
பிரியங்கா கூறும்போது, “காங்கிரஸுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி. இது உங்கள் பிரச்சினைகளுக்கு கிடைத்த வெற்றி, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததன் வெற்றி. இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காக கடினமாக உழைத்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு என் வாழ்த்துகள்” என்று மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் வாங்கியதுதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் கூட காங்கிரசின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகளும் அந்த மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 35 சதவீத மக்களை எளிதாக ஈர்த்துவிட்டதை இன்னொரு காரணமாக கூறலாம்.
அள்ளி வீசிய வாக்குறுதிகள்
இந்த தேர்தலில் ராகுல், பிரியங்கா இருவரும் அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் சில.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
- மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு
குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,000 ரூபாய் என1.5 கோடி பேருக்கு வழங்கப்படும். - பட்டப்படிப்பு முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு
ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். - மாநிலத்தில் டிப்ளமோ மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் அளிக்கப்படும்.
- KSRTC, BMTC பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி.
இதுதவிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் அளித்த ஏராளமான வாக்குறுதிகளில் பெங்களூரு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் மிக முக்கியமானது.
கஜானாவுக்கு வேட்டு?
ராகுல், பிரியங்கா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மாநில அரசின் கஜானாவுக்கு வேட்டு வைப்பவை ஆகும்.
ஒன்றரை கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என்கிறபோது கர்நாடக அரசுக்கு ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்
.
மாநிலத்தில் ஓடும் நான்கு போக்குவரத்து கழகங்களில் 24 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 14 ஆயிரம் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே ஆண்டுக்கு 4500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் 14 ஆயிரம் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் என்றால் வருவாய் இன்னும் சரிபாதியாய் குறையும். மேலும் 4500 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்படலாம்.
படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கும், டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை கர்நாடக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்கிறபோது கர்நாடகாவில் உள்ள 2 கோடி வீடுகளுக்கும் மின் வினியோகம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு
12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மாநில அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் மதிப்பிடப்படுகிறது.
சமாளிக்குமா காங்கிரஸ்
இந்த நான்கு முக்கிய வாக்குறுதிகளால் மட்டும் குறைந்த பட்சம் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆண்டுதோறும் 67 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படலாம்.
ஏற்கனவே மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 61ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இதை புதிய காங்கிரஸ் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. அது புதிய அரசுக்கு சவாலாகவும் உருவெடுத்து இருக்கிறது.
“கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது கூறப்பட்ட 40 சதவீத கமிஷன் ஊழல் குற்றச்சாட்டுதான் ஆட்சியை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கூறினாலும் கூட கர்நாடக கிராம பகுதிகளில் அதன் கவர்ச்சி வாக்குறுதிகள் வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதையும் உணர முடிகிறது.
ஏனென்றால் கர்நாடக கிராமங்கள் 64 சதவீத மக்கள் தொகையை கொண்டது. இங்குள்ள உள்ள 134 தொகுதிகளில் காங்கிரஸ் 97 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறது. பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் எஞ்சிய தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது.
பழி போட காத்திருக்கும் காங்கிரஸ்
மேலும் கிராம பகுதிகளில் பாஜகவை விட காங்கிரஸ் 9 முதல் 11 சதவீத கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. இதுதான் பாஜகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம். எனவே காங்கிரசின் கவர்ச்சி வாக்குறுதிகள் கிராம வாக்காளர்களின் மனதில் ஆழமாக ஊடுருவி காங்கிரசுக்கு ஓட்டு போடும் நிலையை ஏற்படுத்திவிட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேநேரம் ஏராளமான இலவசங்களை அறிவித்துவிட்டு கஜானாவில் எதுவும் இல்லாத நிலையில் புதிய வரிவிதிப்புகள் மூலம் நிலைமையை சமாளிக்க முடியாமல் போனால் கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கும் நிலைதான் ஏற்படும். அவர்கள் எதிர்பார்ப்பதை கொடுக்காவிட்டால், பாருங்கள் இரக்கம் இல்லாத மோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்ய மறுக்கிறது என்று பழி போடவும் காங்கிரசார் தயங்கமாட்டார்கள்.
மேகதாது சவால்
கர்நாடக காங்கிரஸ் அரசைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு மிக அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே வாக்குறுதி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட
9000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்பதுதான்.
தமிழ்நாடு அல்லது கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் எந்த மாநிலம் அணை காட்டுவதாக இருந்தாலும், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அது.இல்லாமல் எதுவும் நடக்காது என்பது வேறு விஷயம்.
சிக்கலில் திமுக அரசு
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ராகுலுக்கு மிகுந்த நெருக்கம் என்பதால் அவர் மூலம் மேகதாது அணைத்திட்டத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு தீவிரமாக கையில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது. அது போன்ற நெருக்கடி எதுவும் டெல்லி மேலிட காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்டால் திமுக அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அதேநேரம் இன்னும் 6 மாதங்களில் மத்தியபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக கர்நாடகாவில் அளித்த கவர்ச்சி வாக்குறுதிகளை விட காங்கிரஸ் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய்,
வீடுகளுக்கு 400 யூனிட் இலவச மின்சாரம் என்று ராகுலும், பிரியங்காவும் வாக்குறுதிகளை அடுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய், வறுமையில் வாடுபவர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இலவச பயணம் என்று கூட அவர்கள் வாக்குறுதிகளை அளிக்கலாம்.
ஏனென்றால் நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உழைப்பைத் தவிர வேறு எதுவுமே அறியாத இந்திய கிராம மக்களில் 75 சதவீதம் பேரை சோம்பேறிகளாக்கியதுடன் அதில் பெரும் மோசடி நடக்க வழியை ஏற்படுத்தி கொடுத்த
பெருமை காங்கிரசுக்கு மட்டுமே உண்டு.
அதனால் நாட்டின் அறிவியல், தொழில் வளர்ச்சிதான் எங்களுக்கு முக்கியம். அதன் மூலம் மக்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள், கை நிறைய சம்பாதிப்பார்கள், நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் முன்னேற்றம் காணும் என்ற நாட்டை வளர்க்கும் நல்ல சிந்தனைகளோடு மட்டுமின்றி தேர்தலில் கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பதிலும் இனி மாநில, தேசிய பாஜக கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? என்பதே கேள்விக்குறியாகிவிடும். வலிமையாக உள்ள மாநிலங்களில் கூட சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி காண்பதும் கடினமாக அமையும்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.