அசோக்குமாரை திமுக ஒளித்து வைத்திருக்கிறதா?…ED சந்தேகக் கண்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 7:23 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்ததுடன் தங்களது காவலில் எடுத்து விசாரணை
நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது.

EDக்கு தலைவலி கொடுக்கும் அசோக்குமார்

அதேநேரம் இந்த வழக்கில் கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்களில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்ய முடியாமல் அமலாக்கத்துறை திணறி வருவது கண்கூடாகவே தெரிகிறது.
கடந்த மூன்று மாதங்களாக EDக்கு அவர் தீராத தலைவலியாக மாறியும் விட்டார்.

சில வாரங்களுக்கு முன் அவர் நேபாள நாட்டிற்கு மலைப்பகுதி வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது அமலாக்கத்துறையால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும், ஆனால் அதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அவர் தப்பிவிட்டதாகவும் ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அசோக்குமார் கைதும், விளக்கமும்!!

இந்த நிலையில்தான் கடந்த 13ம் தேதி அசோக்குமார் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்குள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்டதாகவும், அவரை கைது செய்து திகார் சிறையில் அடைப்பதற்காக சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சி விரைந்ததாகவும் பெரும்பாலான டிவி சேனல்களில் பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால் அவர் கைதாகவில்லை என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

இதை ஒரு நாள் கழித்தே அமலாக்கத்துறை மறுத்தது. “நான்கு முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை. அவரைத் தேடி வருகிறோம். அவருடைய மனைவி, மாமியார் இருவரும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கிறோம்”என்று மட்டும் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து மிக அண்மையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்வது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தங்களது அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ED போட்ட ரகசியத் திட்டம்

இக் கூட்டத்தில் “அசோக்குமாரை கைது செய்வதில் மிகவும் ரகசியத் தன்மையோடு செயல்பட வேண்டும். அசோக்குமாரை நாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தாலும் கூட அவர் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை இருப்பிடங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அதேபோல செல்போன் நம்பர்களையும் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை தொடர்ந்து மாற்றியும் வருகிறார்.

யாருடைய செல்போன் நம்பரை பயன்படுத்தி பேசுகிறார் என்பதை கண்டறிவதற்குள் வேறொரு நம்பருக்கு தாவி விடுகிறார். அதையே வாடிக்கையாக்கி கொண்டும் விட்டார். இப்படி அவர் தொடர்ந்து செல்போன் எண்களை மாற்றிக் கொண்டே இருக்கும் நிலையிலும் அமலாக்கத்துறை அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்து நெருங்கும்போது யார் உதவியுடனோ, எப்படியோ அங்கிருந்து தப்பித்தும் விடுகிறார்.

தமிழக அரசு மீது சந்தேக கண்

கடந்த சில வாரங்களாக இந்த கண்ணாமூச்சி விளையாட்டை அசோக்குமார் ஆடி வருகிறார். ஒரு அமைச்சரின் சகோதரராக இருப்பதால் அவருக்கு தமிழக போலீசார் மறைமுகமாக உதவி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.

ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு அதே மருத்துவமனையில் அசோக்குமாரும் தனக்கும் இதய நோய் இருப்பதாக கூறி ஐந்து நாட்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் சந்தித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக விரிவாக பேசியும் உள்ளனர்.

அப்போது, நான் விடுதலையாகி வெளியே வரும் வரை நீ அமலாக்கத்துறையிடம் சிக்கிக் கொண்டு விடக்கூடாது. அதுவரை தலைமறைவாக இரு. மற்றவற்றை நம்மவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று செந்தில் பாலாஜி தனது தம்பியிடம் கூறி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நாம் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டோம். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகள் பற்றியும் நாம் விரிவாக ஆய்வு செய்து இருக்க வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நடந்து விடக்கூடாது.

மேலும் அவரைக் கைது செய்த பின்புதான் அது பற்றிய செய்தியை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒருவேளை தமிழக போலீஸ் அசோக்குமாருக்கு
உதவி செய்வதால்தான் அவர் பிடிபடாமல் கடைசி நேரத்தில் தப்பி விடுகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது” என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களுக்குள் காரசாரமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

கிண்டலடிக்கும் தமிழக காவல்துறை

இதுபற்றி தமிழக காவல்துறை வட்டாரத்தில் கூறும்போது, “அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது நடைபெறும் வழக்கமான ஒன்றுதான். அதில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருப்பது பற்றி பேசப்பட்டிருக்கலாம். ஆனால் அவரும் அதே தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அண்ணனை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்வதெல்லாம் கற்பனையான ஒன்று. அதில் ஒரு துளி அளவு கூட உண்மை இல்லை கற்பனை வளத்தில் அவர்களை மிஞ்ச ஆளே கிடையாது” என்று கிண்டலடிக்கின்றனர். ஆனால் மூத்த அரசியல் நோக்கர்களின் பார்வையோ இதில் மாறுபட்டதாக உள்ளது.

“சமீபகாலமாகவே அசோக்குமாரை திமுக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவரை யாரும் எளிதில் நெருங்கி விட முடியாதபடி பாதுகாத்தும் வருகிறது என்று ஒரு சில சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு சில பின்னணி காரணங்களும் உண்டு” என்று அவர்கள் கூறுகின்றனர்.

கருணாநிதியிடம் தஞ்சமடைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்

“ஏனென்றால் நெருக்கடி நிலையை 1975 ஜுன் மாதம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய பிறகு ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், கிருபாளனி, வாஜ்பாய், வி.பி.சிங் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தார்.

அதேபோல அன்று நாட்டின் பிரபல தொழிற்சங்கவாதியாக திகழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸையும் கைது செய்து சிறையில் அடைக்க இந்திரா காந்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்போது வடமாநிலங்களில் இருந்தால் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்று கருதிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் பல்வேறு மாறுவேடங்களில் அலைந்து திரிந்து கடைசியில் தமிழகத்திற்கு வந்தால் தன்னை யாராலும் பிடிக்க முடியாது என்று கருதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் தஞ்சம் புகுந்தார். அவரை பல நாட்கள் திமுகவினர் சென்னையில் ரகசிய இடத்தில் பாதுகாப்பாகவும் வைத்திருந்தனர்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் அவர் தலைமறைவாக இருந்த நேரத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை போலீசார், பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினர் நாடு முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தியும் கூட ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னையில் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.

இந்த தகவல்களையெல்லாம் பிற்காலத்தில் நாட்டின் ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டசே பெருமையோடு வெளிப்படையாக ஒப்புக்கொண்டும் இருக்கிறார்.

திமுகவுக்கு கைவந்த கலை

இதை தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருப்பதுடன் தொடர்புபடுத்தி பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவே இதுபோன்ற விஷயங்களை கடைசி வரை ரகசியமாக வைத்திருப்பது, திமுகவினருக்கு கைவந்த கலை. அதில் அவர்களுக்கு உள்ள திறமையையும் கெட்டிக்காரத்தனத்தையும் அமலாக்கத்துறை இதுவரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

அதேநேரம் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையிலேயே அவருடைய அண்ணன் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்து அவர் சிறையில் இருந்து வெளியேறாதவாறு முடக்கி இருப்பது மட்டுமே அமலாக்கத்துறையின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக தெரிகிறது”
என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அசோக்குமார் கைதான பின்பே இது பற்றிய அத்தனை உண்மைகளும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம். அதுவரை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 427

    0

    0