வாக்காளர்களை திமுக மிரட்டுகிறதா?…தள்ளிப்போகிறதா இடைத்தேர்தல்?

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2023, 9:17 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதை கௌரவ பிரச்சினையாக கருதும் திமுக, அதற்காக கடந்த 15 நாட்களாக சாலையோர டீக்கடைகளில் போண்டா போடுவது, வடை சுடுவது, இஸ்திரி இழுப்பது, ஓடிக்கொண்டும், ஒட்டக சவாரி செய்தும் ஓட்டு சேகரிப்பது என பல்வேறு வழிகளில் வாக்காளர்களிடம் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருவது கண்கூடு.

திமுக குழுவில் 32 பேர்

இதற்காக 11 அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் பணிக் குழுவில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என 32 பேர் மட்டுமே முதலில் இருந்தனர்.

ஆனால் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கடந்த 7ம் தேதி உறுதியான பின்பு, ஈ வி கே எஸ் இளங்கோவனை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற வேகம் திமுகவினரை ஜெட் வேகத்திற்கு மாற்றிவிட்டது.

படையை குவித்த திமுக

அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பத்தின்படிதான் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த தேர்தலிலேயே போட்டியிடுகிறார் என்பது வெளிப்படையாக தெரிய வந்ததும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 25க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் 1 2 எம்பிக்கள்,
36 எம் எல் ஏக்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒரு பெரும் படையே தேர்தல் களத்தில் குதித்து தினமும் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு புதுமையான தேர்தல் ஃபார்முலாவை திமுக உருவாக்கி விட்டும் இருக்கிறது என்கிறார்கள்.

வாக்காளர்களை அடைத்து வைத்த திமுக

இந்த தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தெருக்களில் தேர்தல் பணிமனைகளை அமைத்து அங்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விளிம்பு நிலை வாக்காளர்களை அழைத்து வந்து கண்காணிப்பதுடன் அவர்களுக்கு காலை நேர உணவாக சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு நேரங்களில் பிரியாணி, வீடு திரும்பும்போது ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தவிர தொகுதியில் உள்ள தினக்கூலிகள் யாரும் எந்த வேலைக்கும் செல்ல விடாமல் திமுகவினர் இந்த பனிமணை கொட்டகைக்குள் அடைத்து வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த விளிம்பு நிலை வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இவர்களில் 85 சதவீதம் பேர் கடந்த பல தேர்தல்களாக அதிமுகவுக்கு ஓட்டு போடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்று கூறப்படுவதுதான்!

அதனால்தான் இப்படி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தினமும்
12 மணி நேரம் திமுக தேர்தல் பணிமனைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை அதிமுக தேர்தல் ஆணையத்திடம் வைத்துள்ளது.

ரூ.36 கோடி செலவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க திமுக களத்தில் என்னவெல்லாம் செய்கிறது என்பது குறித்து அதிமுக ஒரு பட்டியலையும் வெளியிட்டது. அதில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக 36 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இன்னொரு பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நாராயண வலசுவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பெரும் பான்மையாக வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு தினமும் தலா 1000 ரூபாய் கொடுத்து அவர்களிடம் ரகசிய கேமரா மூலம் நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை கண்டுபிடித்து விடுவோம். அதிமுகவுக்கு வாக்களித்தால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என உள்ளூர் திமுக நிர்வாகிகள் பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு மிரட்டல்

இந்த நிலையில்தான் திமுகவினர் அடைத்து வைத்திருக்கும் வாக்காளர்களை அவர்களது பணிமனைக்கே சென்று ஓட்டு கேட்பேன் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிக்கவும் செய்தார். இது திமுகவுக்கு மேலும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அனுமதியின்றி அமைக்கப்பட்ட பணிமனைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி தொடர்ந்து அகற்றி வரும் நிலையில் இந்த கொட்டகை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிப்படத் தொடங்கி இருக்கிறது. இதனால் அனுமதி பெறாத பணிமனைகளில் வாக்காளர்களை அடைத்து வைப்பதில் இனி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட திமுகவினர் இப்போது இன்னொரு புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளதாக
தெரிகிறது.

சிறப்பான கவனிப்பு

அதாவது அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்று கருதப்படும் 40 ஆயிரம் வாக்காளர்களை ஓட்டுப்பதிவு முடியும் வரை சுழற்சி முறையில் ஈரோடு மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களான நாமக்கல், கரூர், திருப்பூர், கோவையில்
உள்ள சுற்றுலா தளங்களுக்கு சொகுசு வேன்களில் காலை 7 மணிக்கு அழைத்து சென்று மாலை 7 மணிக்கு அவர்களின் வீடுகளில் விட்டுவிடுவது என்ற புதிய உத்தியை கையாளத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வழக்கமான ஆயிரம் ரூபாய் உபசரிப்பும் உண்டு என்கிறார்கள்.

இதற்கும் எதிர்ப்பு கிளம்பினால் வருகிற 26-ம் தேதி முடிய அதிமுகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை பக்கத்து மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் அனைத்து வசதிகளுடனும் தங்க வைப்பதற்கான இன்னொரு திட்டமும் திமுகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் பணிக்குழு அதிமுகவினரை வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்க பல்வேறு தந்திரங்களையும் கையாளுவது எதனால்? என்ற கேள்விக்கு மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

இபிஎஸ்க்கே மகுடம்

“கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவை பரம விரோதியாக பார்க்கும் ஒரே பிரதான கட்சி அதிமுகதான். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அது காணாமல் போய்விடும் என்று திமுக கணக்கு போட்டது. தவிர 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே எடப்பாடி பழனிசாமி ஆட்சி இதோ இன்னும் மூன்று மாதங்களில் கவிழ்ந்து விடும் ஆறு மாதங்களில் முடிந்து போய்விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது தொடர்ந்து மேடைகளில் பேசியும் வந்தார். இதற்காக டிடிவி தினகரனுக்கு மறைமுக ஆதரவையும் திமுக அளித்தது. இப்படி திமுக கொடுத்த பல்வேறு குடைச்சல்களையும் சமாளித்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி திறம்பட ஆட்சியை நடத்திக் காட்டியும் விட்டார்.

அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்த ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகிவிட்டார். ஆனால் ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவரின் வாரிசாக இருந்தபோதும் கூட தன்னால் அந்த நிலையை 2021 தேர்தல் நடந்து முடியும் வரை அடைய முடியவில்லையே என்ற ஆதங்கமும், கடும் கோபமும் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஜீரணிக்க முடியாத ஸ்டாலின்!!

அதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோது இனி அதிமுகவின் கதை முடிந்தது என்றுதான் திமுக நினைத்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிமுகவின் 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பி விட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டுவிடும் என்றும் அறிவாலயம் கணக்கு போட்டது. அதுவும் நடக்கவில்லை.

கடந்த வாரம் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய கருத்துக்கணிப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே சிறந்தது என்று 53 சதவீதம் பேரும், 21 மாத ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று
42 சதவீதம் பேரும் மதிப்பீடு செய்துள்ளனர். இதையும் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இடைத்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு பிரயத்தனம்?

இதனால்தான் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ஓட்டுகளிலாவது ஜெயிக்க வைத்து விடவேண்டும். அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு அவருடைய கொங்கு மண்டலத்திலேயே ஆதரவு இல்லை என்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திமுக இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான எல்லாவித அஸ்திரங்களையும் கையில் எடுத்துள்ளது என்றே கருதத் தோன்றுகிறது.

ஆனால் நடப்பதோ இடைத்தேர்தல். இதற்கு ஏன் திமுக இவ்வளவு பகீரத பிரயத்தனம் மேற்கொள்கிறது என்பதுதான் புரியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இப்படி வாக்காளர்களை திமுகவால் 20, 25 நாட்களுக்கு உணவளித்தும் ரொக்கம் கொடுத்து தொடர்ந்து உபசரிக்கவும் கண்கணிக்கவும் முடியுமா? என்பது கேள்விக்குறி தான்.

இப்போது எவ்வளவுதான் ஓட்டு வித்தியாசத்தை காட்டினாலும் அது பொதுத் தேர்தலில் சிறிதும் எதிரொலிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் பல இடைத்தேர்தல்களுக்கு பின்பு நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் இதை அறிந்து கொள்ள முடியும்.

தள்ளிவைக்கப்படுமா இடைத்தேர்தல்?

வாக்காளர்கள் ஆதரவு, விருப்பத்துடன்தான் அவர்களை நாங்கள் வழி நடத்துகிறோம், நடந்து கொள்கிறோம் என்று என்னதான் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கூறினாலும் தங்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதாக பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் யாராவது சிலர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தால் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

ஏனென்றால் 2017 மே மாதம் நடக்க இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏப்ரல் மாதம் வேலூர் தொகுதியில் 12 கோடி ரூபாய் பிடிபட்டதால் அந்தத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அதுபோன்ற நிலை ஈரோடு கிழக்கிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதையும் மறுக்க முடியாது” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 403

    0

    0