கமலை திமுக கை கழுவுகிறதா?… திடீரென கொந்தளித்த ம.நீ.ம.!

கமலை திமுக கை கழுவுகிறதா?… திடீரென கொந்தளித்த ம.நீ.ம.!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தொடர்பாக இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 தமிழக தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தோல்வி கண்டதிலிருந்து கமல் திமுகவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அவருக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உண்டு என்றாலும் கூட நாடாளுமன்ற, சட்டப் பேரவை தேர்தல்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் வெற்றி பெறவேண்டும் என்றால் திமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அது சாத்தியமாகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

அதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவது அவருடைய வாடிக்கையாகிவிட்டது. திமுக அரசுக்கு எதிராக ஏதாவது பிரச்சனை வெடித்தால் அதை அவர் கண்டு கொள்வதுமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதும் கிடையாது என்பது அரசியலில் உள்ளோர் அனைவரும் அறிந்த ஒன்று.

இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு கோவை தொகுதியைத் திமுகவிடம் எப்படியும் கேட்டு வாங்கி விடலாம், வெற்றி நாயகனாக நாடாளுமன்றத்திற்குள்ளும் செல்லலாம் என்று கமல் கணக்கு போட்டும் வைத்திருந்தார். இதற்காக அமைச்சர் உதயநிதி, சபரீசன் மூலமாக ஸ்டாலினுக்கு தூதுவிட்டு அவர் திரை மறைவில் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுவதுண்டு.

ஆனால் இதற்கு கைமேல் பலன் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட மக்கள் நீதி மய்யத்திற்கு இதுவரை திமுக தலைமை தந்ததாக தெரியவில்லை. இதனால் இலவு காத்த கிளியாக மாறிப்போன கமல்
தனது கட்சியின் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவை இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இக் கூட்டத்தில் கமல் பேசும்போது இதுவரை கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யத்தை திமுக அழைக்காத விரக்தி வெளிப்படையாகவே தெரிந்தது.

“நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி அமைத்து நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும். செயல்படாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்காக உழைக்கவேண்டும்”
என்று கமல் மிக உருக்கமாக பேசி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி கூட்டணி அமைப்பது தொடர்பாக 2 முக்கிய நிபந்தனைகளையும்
மக்கள் நீதி மய்யம் விதித்துள்ளது.

“தமிழ் நாட்டின் வளர்ச்சியிலும் , தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் , கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணியில் இணைவோம். இந்த
2 நிபந்தனைகளோடும் ஒத்து வராவிட்டால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்” என அதிரடி காட்டி இருக்கிறது.

மேலும் பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டம் தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் மவுரியா கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரசார வியூகம் மற்றும் தலைவரின் சுற்றுப் பயணம் ஆகியவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

கமல் இப்படி திடீரென்று இரண்டு நிபந்தனைகள் விதித்திருப்பது திமுக, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய விரும்புவதையே காட்டுகிறது. என்ற போதிலும் தனித்துப் போட்டி என்னும் அறிவிப்பை அவர் சேர்த்து வெளியிட்டிருப்பதுதான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.

நாங்கள் எவ்வளவோ தூரம் இறங்கி வந்து விட்டோம். அதன் பிறகும் கூட எங்களை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறீர்களே, இனியும் எங்களை அழைக்காவிட்டால் நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று திமுக தலைமைக்கு மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கமல் கட்சியை காங்கிரசின் ஒரு துணை அமைப்பாகத்தான் திமுக பார்க்கிறது. அதனால் காங்கிரஸுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒன்றை அக்கட்சி கமலுக்கு கொடுக்கட்டுமே என்று திமுக தேர்தல் பணிக் குழுவில் உள்ள அத்தனை தலைவர்களுமே கூறுவதாக தெரிகிறது. ஆனால் நடிகர் கமலோ தனது கட்சியை தனிப்பட்ட முறையில் கூட்டணியில் இணைத்துக் கொண்டு கோவை தொகுதியை ஒதுக்கி தரவேண்டும் என்று விரும்புகிறார்.

இது முதல் காரணம். இரண்டாவதாக அதிமுகவும், பாஜகவும் வலுவாக உள்ள கோவை தொகுதியை நடிகர் கமலுக்கு ஒதுக்கி அங்கு அவர் தோற்க நேர்ந்து விட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விடும் என்று கருதியோ, என்னவோ பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது.

ஆனால் கோவையை குறிவைத்து கமல் ஆறு மாதங்களுக்கு முன்பே தனது கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகளை தொடங்கி விடுங்கள் என்று கூறிவிட்டார். அவர்களும் தீவிர களப்பணியில் இறங்கி விட்டனர். இந்த நிலையில் அவருக்கு கோவை தொகுதி கிடைக்காவிட்டால் அது கவுரவ பிரச்சினையாகவும் மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது.

திமுகவுடன் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால்தான் கமல்ஹாசன் அவசர அவசரமாக தனது கட்சியின் செயற்குழுவை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்கிறார்கள்.

அதேநேரம் அண்மையில் திமுக இளைஞரணி எடுத்ததாக கூறப்படும் ரகசிய சர்வேயில் கமல் கட்சிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக தேர்தல் ஆகியவற்றில் கிடைத்தது போல இளம் வாக்காளர்களிடம் இப்போது வரவேற்பு எதுவும் இல்லை. அவருக்கு மாநிலம் முழுவதும் அரை சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஆதரவு காணப்படுகிறது என்று தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கமல் வேறு எந்த கூட்டணியிலும் இணைய முடியாது. நம்மை விட்டால் அவருக்கு வேறு கதியும் கிடையாது. அதனால் அவருடைய கட்சியை கூட்டணியில் சேர்க்கவோ, சீட் கொடுக்கவேண்டிய அவசியமோ இல்லை என்ற முடிவுக்கு அறிவாலயம் வந்துள்ளதாகவும் தெரிகிறது.

அதாவது கிட்டத்தட்ட வைகோவின் மதிமுக போன்ற நிலைதான் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஏற்பட்டுவிட்டது. அதேநேரம் தமிழக காங்கிரசோ இந்த முறை திமுக தங்களுக்கு மிகக் குறைவான தொகுதிகளைத்தான் ஒதுக்கீடு செய்யும். அதில் ஒன்றை கமலுக்கு கொடுக்க வேண்டுமா? என்று தீவிரமாக யோசிக்கிறது. இப்படி இரண்டு பக்கமும் கமலுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது.

இன்னொரு பக்கம், திமுகவின் மக்களவை தேர்தல் அறிக்கை கதாநாயாகியாகவும் இருக்கலாம், என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி கூறியிருப்பது திமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சாதாரண அரசு டவுன் பஸ்களில் மகளிர்க்கு இலவச பயணம் என்று அறிவித்திருப்பதைப் போல இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை என்னும் தேர்தல் வாக்குறுதியை அளிப்பார் என்பதற்காகத்தான் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம் என்று கனிமொழி பூடகமாக குறிப்பிட்டு இருக்கிறார் என்று திமுகவினர் உறுதியாக நம்புகிறார்கள்.

இதனால் தமிழகத்தின் 39 தொகுதிகளையும் வெல்வதுடன் இண்டியா கூட்டணி மத்தியில் எளிதில் ஆட்சியை கைப்பற்றி விடும். அதுபோன்ற சூழ்நிலையில் கமல் கட்சியின் ஆதரவே நமக்கு தேவை இல்லை என்று திமுக கருதவும் வாய்ப்பு உண்டு.

இதனால் கமலுக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்குமா?… கோவை தொகுதி அவருக்கு ஒதுக்கப்படுமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

15 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 hours ago

This website uses cookies.