நீதிக்காக குரல் கொடுத்தால் பொய் வழக்கா? திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 9:32 pm

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், அச்சுறுத்தி அடக்கு முறையால் பணியவைக்க ஆளும்கட்சி தி.மு.க. நினைக்கிறது.

ஆகவே, அவசரகதியில், ஆதாரம் இல்லாத வழக்குகளை அடுக்கடுக்காய் தொடுத்து, தன் ஜனநாயக கடமை ஆற்றும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் எல்லாம் தொடர் வழக்குகளால் மிரட்டப் பார்க்கிறார்கள்.

ஆட்சிமன்றம் கையில் இருப்பதினால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதா?. திறனற்ற தி.மு.க. ஆட்சியில், திரும்பிய திசைகள் எல்லாம், திக்கற்ற நிலையில் நிற்கிறது தமிழகம்.

ஆனால் செய்ய வேண்டிய மக்கள் பணிகளைச் செய்யாத தி.மு.க., எதிர்க்கட்சிகளை மிரட்டும், எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம்.

ஆளும் கட்சியினரால், தொடங்கப்பட்ட வடமொழி எதிர்ப்பு கோஷங்கள். அதில் போடா என்ற சொல், விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசி விட்டார்கள் என்ற பரபரப்பை கிளப்பி, அப்படிப் பேசிய பாதுகாப்பு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய கோபம், திருப்பூரில் நிகழ்ந்த மோதல், இப்படி கிளப்பி விடப்பட்ட, வடக்கு தெற்கு வெறுப்புணர்வும் வன்மமும், தேச ஒற்றுமைக்கு பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வின் அடிப்படையில், பொது நீதிக்காக குரல் கொடுத்து அறிக்கை விட்டதற்காக, பொய் வழக்கு போடுகிறார்கள்.

அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு பா.ஜ.க. தொண்டனும் வழக்குக்கும், சிறைக்கும் அஞ்சுவதில்லை. நியாயத்திற்காகப் போராடினால் பொய் வழக்கா? என்ற கேள்வியுடன் திறனற்ற தி.மு.க. ஆட்சியின் அராஜகப் போக்கை எதிர்க்கிறோம்.

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, மற்றும் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள, சென்னை பெருங்கோட்டத்திற்குட்பட்ட பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள், எழுச்சியுடன் முன்னெடுக்கும் அறப்போராட்டம், 10-3-2023 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ