திமுக குடும்பம் மட்டும் வீடு, நிலம் வாங்கினால் போதுமா? முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2023, 10:03 pm
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலையேற்றம் ஒன்றை மட்டும் மூன்று மாத இடைவெளியில் மக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது.
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வை தொடர்ந்து நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதமும் முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கும் உயர்த்தியுள்ளது திறனற்ற திமுக அரசு. திமுகவினர், அவர்களது உற்றார் மற்றும் உறவினர்கள் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை விலையை பல மடங்கு கூட்டி சாமானிய மனிதர்கள் வீட்டுமனை வாங்கும் திட்டத்தை கைவிடும்படி செய்துள்ளனர். இது போதாதென்று தற்போது இருக்கும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி பதிவுத்துறை தலைவர் அனுப்பிய சுற்றறிக்கை எண் 5247/67601/2023-1 படி, தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கண்டறிய ஒரு குழு அமைத்ததாகவும் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க தாமதம் ஆவதால் 2017 ஆம் ஆண்டு குறைக்கப்பட்ட சதவீத மதிப்பை அடிப்படையாக கொண்டு தற்போது உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விட எழுப்புகிறது. 33 சதவீதம் உயர்த்தியுள்ளது சந்தேகங்களைஎழுப்புகிறது.
அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை விட சந்தை விலை குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாகவே தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. தற்போது உயர்த்தப்பட்ட 33 சதவீத வழிகாட்டி பாதிப்பினால் சந்தை விலை மேலும் கூடி சாமானிய மனிதர்களின் நிலம், வீட்டு மனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தை முழுவதுமாக முடக்கிவிடும். 2022-23 நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ஈட்டிய மொத்த வருவாய் 17,297 கோடி ரூபாய், அதற்கு முந்தைய ஆண்டை விட 24.3 சதவீதம் அதிகம்.
இவ்வாறு இருக்கையில் எதற்காக முத்திரைத்தாள் கட்டணத்தையும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை எதற்காக பன்மடங்கு உயர்த்த வேண்டும்? அரசின் திட்டங்களை செயல்படுத்த கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மட்டும் இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு சென்றால் நிலத்தை இழந்த மக்கள் பயனடைவார்கள்.
ஆனால், தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் ஒதுக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத்திற்கு உட்பட்ட மற்றும் சுற்றியுள்ள நிலங்களை சமீப காலமாக பலர் வாங்கிவருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் கூட்டியதால் சமீபத்தில் நிலம் வாங்கியோர் பல கோடி லாபம் அடைவார்கள். இதில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் இனி சந்தை விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதால், அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அறிவிக்கப்பட்ட 10 மடங்கு முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.