தேசியக் கொடியை வீசிய காவலருக்கு பணியிட மாற்றம் மட்டும்தானா? ஹெச் ராஜா கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2023, 1:22 pm

தேசியக் கொடியை வீசிய காவலருக்கு பணியிட மாற்றம் மட்டும்தானா? ஹெச் ராஜா கண்டனம்!!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதின.

இந்த போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மைதானத்துக்குள் தேசிய கொடி உள்ளிட்டவைகளை கொண்டு செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை.

சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்களை சோதனையிட்ட காவல்துறை எஸ்.ஐ. நாகராஜ், அவர்களிடம் இருந்த தேசிய கொடிகளை பறிமுதல் செய்து அங்கிருந்த குப்பை தொட்டியில் போட முயற்சித்தார் என கூறப்படுகிறது. இது சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.நாகராஜ், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அத்துடன் எஸ்.ஐ.நாகராஜிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எஸ்.ஐ.நாகராஜை பணியிட மாற்றம் செய்தது தண்டனையே அல்ல; அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து தேசிய கொடியை பறித்து குப்பை தொட்டியில் வீசிய தேச விரோதியை ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் இருக்கிறது தமிழக‌ அரசு மற்றும் DGP என்று விளக்கமளிக்க வேண்டும்.

தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட்ட நபர் இந்த நாட்டிற்கு எதிராக செயல்பட மாட்டார் என்று‌ என்ன‌ நிச்சயம். தமிழக காவல்துறை கொஞ்சம் கொஞ்சமாக தேச விரோதமாக திரும்புகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த நபரை மாற்றுவது என்பது தண்டனை அல்ல. டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இது வன்மையாக கண்டிக்கதக்க செயல். இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!