உயர்சாதி ஏழைகள் என கூறி இடஒதுக்கீடு தருவது சமூக நீதியா? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2023, 9:26 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு கூட்டம் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
சமூகநீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டத்திடத்தையும் முன்னெடுத்து செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி நம்மை இணைத்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூகநீதி அல்ல. ஏழைகளுக்கு எந்த பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.
அது பொருளாதார நீதியே ஆகுமே தவிர சமூகநீதி ஆகாது. ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகள் தானே இருக்க முடியும். அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா?
அதனால் தான் பொருளாதார அளவுகோளை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமைபொய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.
இந்த வன்மமான எண்ணத்திற்கு அதிகம் விளக்கம் கூற தேவையில்லை. பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும்.
சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி’ என்றார்.