திமுகவுக்கு வியூகம் வகுக்க PK மீண்டும் வருகிறாரா? தமிழக அரசியல் களம் பரபர…!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 9:34 pm

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்
இரண்டு வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், தான் இனி எந்த கட்சிக்கும் தொழில்முறை ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்று அதிரடியாக கூறியிருந்தார்.

தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை பெற்று தந்த பிறகு, 2021 மே மாதம் அளித்த பேட்டி ஒன்றில்தான் அவர் இப்படி தெரிவித்து இருந்தார்.

மீண்டும் களமிறங்கும் பி.கே!

ஆனால் அவருடைய பேச்சு ஓடுகிற நீரில் எழுதும் எழுத்துபோல ஆகிவிடும் போல் தெரிகிறது. இதற்குக் காரணம் அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக நவம்பர் மாத இறுதியில் தமிழகம் வரப்போவதாகவும் அப்போது முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசப்போவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி சில ஊடகங்களில் வெளியாகி இருப்பதுதான்.

அதேநேரம் இதற்கு திமுகவின் சீனியர் அமைச்சர்களிடமும், கட்சியின் மாவட்ட செயலாளர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்கிறார்கள்.

கடந்த ஜூன் மாத இறுதியிலேயே இது போன்றதொரு முயற்சி பிரசாந்த் கிஷோர் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாஜகவுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சிகளின் அமைப்பான ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’யின் முதல் கூட்டம் பாட்னா நகரில் நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பிரசாந்த் கிஷோர் போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்களை வகுத்துக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த தகவல் 10 நாட்களுக்குப் பிறகே அரசியல் வட்டாரத்தில் மெல்ல மெல்ல கசியத் தொடங்கியது. இதனால் திமுகவில் பெரும் சலசலப்பும் ஏற்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பிரசாந்த் கிஷோர் நமக்கு தேவையில்லை என்று போர்க் கொடி உயர்த்தியதாகவும் கூறப்பட்டது. அவர் மீண்டும் வந்தால் கட்சிக்குள் பெரிய குழப்பம் ஏற்படும் என்று மூத்த அமைச்சர்கள் சிலர் பிரசாந்த் கிஷோருக்கு முட்டுக்கட்டையும் போட்டுள்ளனர்.

அடுத்த மாதம் சென்னை விசிட்

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளையோ, வியூகங்களையோ பெறாமலேயே திமுக, காங்கிரஸ் கூட்டணி
38 இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருக்கும்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவருடைய வியூகம் திமுகவுக்கு தேவையா? என்ற கேள்வியையும் அவர்களில் சிலர் எழுப்பி உள்ளனர். இதனால் இதுபற்றி அப்போது ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

இப்போது இரண்டாவது முறையாக, திமுக தலைவர் ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் தனது விருப்பத்தை தெரிவித்து அதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டதாகவும்
அதன் எதிரொலியாகவே பிரசாந்த் கிஷோர் அடுத்த மாதம் சென்னை வரப்போவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இது பல்வேறு யூகங்களையும், கேள்விகளையும் பொதுவெளியில் எழுப்பி இருக்கிறது.

திமுக நிர்வாகிகள் அப்செட்

ஒரு சில திமுக நிர்வாகிகளோ, “தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக உள்ள நிலையிலும் தகுதியுள்ள ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, சாதாரண நகர டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மூன்று ஆண்டுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் போன்ற மகளிர்க்கு பணப்பயன் அளிக்கும் திட்டங்களும்
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலமே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் நமது கூட்டணியால் எளிதாக கைப்பற்றி விட முடியும் என்கிற நிலை இருக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் எதற்கு? என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர்.

ஆனால் பிரசாந்த் கிஷோரோ தன்னிடம் கிடைத்த இரண்டு முக்கிய தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மாறியது கருத்து கணிப்பு

பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தவரை தமிழகத்தில் திமுக கூட்டணி அதிகபட்சமாக 34 இடங்களில்தான் வெற்றி பெற முடியும் என்பது ஆங்கில ஊடகங்கள் எடுத்த பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் 25ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக அதிமுக அறிவித்ததை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் அப்படியே மாறிவிட்டது.

இதுவரை கடந்த இரண்டு தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு கிடைத்த வந்த சிறுபான்மையினரின் ஓட்டுகளில் சரி பாதி இனி அதிமுகவிற்கு செல்லும். அதேநேரம் பாஜக தலைமையில் வலுவான 3-வது அணி அமைந்தால் 2019 தேர்தல் போல திமுக கூட்டணிக்கு 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை. நாம் தமிழர் கட்சி
6.7 சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. ஆனால் அந்தக் கட்சிக்கு 2021 தேர்தல் போல ஓட்டுகள் அப்படியே கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதுதான் எதார்த்த நிலை.

எனவே வலுவான முமுனைப் போட்டி அமைந்தால் திமுக கூட்டணிக்கு 45% ஓட்டுகளுடன் அதிகபட்சமாக 29 இடங்களில் வெற்றி கிடைக்கும். அதிமுகவோ 26 சதவீத ஓட்டுகளுடன் 7 தொகுதிகளை கைப்பற்றும். பாஜக கூட்டணியில் பாமக இணைந்தால் அதிகபட்சம் 15 சதவீத வாக்குகளுடன் மூன்று இடங்களில் வெற்றி பெறும். திமுகவுக்கு ஓரிரு சதவீத வாக்குகள் குறைந்தால் அதன் காரணமாக அதிமுகவுக்கும், பாஜக கூட்டணிக்கும் இன்னும் இரண்டு இடங்கள் வரை கூடுதலாக கிடைக்கலாம் என்பதுதான் தேர்தல் கணிப்பு நிபுணர்களின் தற்போதைய மதிப்பீடாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக அரசு மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்திதான். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்,-ஒழுங்கு சீர்குலைவு, மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்வு, சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, திமுகவினரின் நில அபகரிப்பு, அத்துமீறல்கள், போதைப் பொருட்கள் தாராள நடமாட்டம் போன்றவை 2024 தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பிரசாந்த் கிஷோர் வர காரணமே இதுதான்

“பிரசாந்த் கிஷோர் போன்ற கை தேர்ந்த பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கு இந்த கணிப்புகள் எல்லாம் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவருடைய ஐ-பேக் நிறுவனத்தின் சார்பில் திமுகவுக்காக பணியாற்றிய 702 பேரில் 25க்கும் மேற்பட்டவர்கள் இன்றும் திமுகவின் தொழில்நுட்ப பிரிவு அணியில் வேலை செய்து வருவதுதாக கூறப்படுவதுதான். அவர்கள் மூலமே தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கு சரிந்து இருப்பது பிரசாந்த் கிஷோருக்கு தெரிய வந்திருக்கும். அதனால்தான் திமுக கூட்டணிக்கு 39 இடங்களிலும் வெற்றி கிடைப்பதற்கான வியூகங்களை வகுத்து தர அவர் விரும்புகிறார் என்பது வெளிப்படை” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிடவேண்டும், திமுக கூட்டணிக்கு
30 இடங்களுக்கும் குறைவாக கிடைத்தால் அதில் திமுகவுக்கு அதிகபட்சம் 20 எம்பிக்கள்தான் இருப்பார்கள். ஆனால் பிரதமர் கனவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினோ திமுக மட்டுமே 30 இடங்களில் வெற்றி பெற வேண்டும், அப்போதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால், நம்மால் பிரதமர் பதவிக்கு சிறந்த போட்டியாளராக வர முடியும் என்று நம்புகிறார். இதைத்தான், பிரசாந்த் கிஷோர் தனக்குரிய வாய்ப்பாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டார்.

பிரதமர் கனவு பறிபோகுமா?

ஏனென்றால் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்பதை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆரம்பத்திலேயே தெள்ளத் தெளிவாக தெரிவித்து விட்டார். பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அதனால்
நிதிஷ்குமாருக்கு ஆதரவாக அவர் செயல்படமாட்டார். இதை புரிந்து கொண்டுதான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து நிதிஷ்குமாரும் ஒதுங்கிவிட்டார்.

இதனால்தான் 2021 தமிழக தேர்தலின் போது திமுகவுக்கு வியூகங்கள் வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்காக மீண்டும் பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவருடைய வியூகங்களுக்கு, மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது நிச்சயம். ஏனென்றால் கடந்த தேர்தலின்போது பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் கட்டணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது உண்டு.

தவிர இப்போது ஸ்டாலின் தேடுவது பிரதமர் பதவி அல்லவா? அதனால் பிரசாந்த் கிஷோரின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள். அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கும் கே எஸ் அழகிரி உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகி விடுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்ளை என்ன?

ஏனென்றால் கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது காங்கிரசுக்கு
25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கவேண்டாம் என்பதுதான் பிரசாந்த் கிஷோர் திமுக தலைமையிடம் வைத்த முக்கிய வேண்டுகோளாக இருந்தது. அதை ஸ்டாலினும் தட்டாமல் அப்படியே ஏற்றும் கொண்டார். அதனால் இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைத்து விடுமோ என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பீதியில் உள்ளனர்.

அவர்களின் ஒரே வேண்டுதல் பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்க ஸ்டாலின் சம்மதம் தெரிவித்த விடக்கூடாது என்பதாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

2024 தேர்தலில் வியூகங்களை திமுகவுக்கு வகுத்து தர பிரசாந்த் கிஷோர் விரும்புவதை ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்விக்கு இன்னும் ஒரு மாதத்தில் தெளிவான விடை கிடைத்துவிடும்!

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 464

    0

    0