திமுகவை ராகுல் ஓரம் கட்டுகிறாரா?…தமிழக அரசியல் களம் பரபர…

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2023, 9:51 pm

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டபோது அந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்
தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச விரும்பியதாகவும் ஆனால் அதை ராகுல் திட்டமிட்டே தவிர்த்து விட்டதாகவும் ஒரு தகவல் தற்போது ஊடகங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

ஸ்டாலினை ஓரம் கட்டினாரா ராகுல்

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது. தவிர திமுக கூட்டணியை மனதார நேசிக்கும் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் திமுக தலைவர் வைத்தது சாதாரண கோரிக்கை அல்ல. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு விஷயம்.

தொகுதி பங்கீடு பேச்சு

“குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ராகுலை ஒதுக்கி தரச் சொல்லுங்கள் 2024 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி இன்றே பேசி முடிவு செய்து விடலாம். அது நாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெரிதும் கை கொடுக்கும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல, பொருத்தமான இடமும் கிடையாது என்று கூறி அதற்கு ராகுல் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்கிறார்கள்.

4 மாநில தேர்தலுக்கு குறி?

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கூறப்படும் முக்கிய காரணம், இந்த ஆண்டின் இறுதியில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று ராகுல் எதிர்பார்க்கிறார். அதனால் இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச அவர் விரும்புகிறார் என்கின்றனர். இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

எனினும் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் பெரும்பாலான நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணிக்கே அதிக வெற்றிகளைத் தேடித் தந்துள்ளனர். அதனால் எதிர்வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 90 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை காங்கிரஸ் இப்போதே வகுத்தும் விட்டது.

அதன்படி கர்நாடகாவில் 28, கேரளாவில் 20, தெலுங்கானாவில் 17, தமிழகத்தில் 15, ஆந்திராவில் 9, புதுச்சேரியில் ஒன்று என 90 தொகுதிகளை காங்கிரஸ் குறி வைத்து இருக்கிறது.

இதில் தமிழகத்திலும், புதுவையிலும் மட்டுமே திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் அக் கட்சி உள்ளது. மற்ற நான்கு தென் மாநிலங்களிலும்
தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு வலுவான பிரதான கட்சியாக தாங்கள் இருப்பதாக காங்கிரஸ் நம்புகிறது. இந்த மாநிலங்களில் வெற்றியை பறிப்பதற்காக டெல்லி மேலிடம் இப்போதே களம் இறங்கியும் விட்டது.

பிரதமர் கனவில் ஸ்டாலின்?

என்றபோதிலும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டிடும்போது புதுச்சேரி உள்பட 16 தொகுதிகளை கேட்டு பெற்று விடவேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் மிக உறுதியாக உள்ளது.

அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஓராண்டாகவே தேசிய அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதை காண முடிகிறது. “எங்கள் திராவிட மாடல் ஆட்சிதான் நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி” என்றும் அவர் மேடைதோறும் முழங்கி வருகிறார். அவரும் பிரதமர் கனவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதுவும் நாட்டின் பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியானவர் என்று
சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கூறிய பிறகு அந்த எதிர்பார்ப்பு ஸ்டாலினிடம் இன்னும் பல மடங்கு எகிறி விட்டதாகவே தெரிகிறது.

காங்.,க்கு 15 தொகுதிகள் ஒதுக்குமா?

அதனால் 2024 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்பார்க்கும் 15 தொகுதிகளை திமுக ஒதுக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அதுவும் காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையில் திமுக இருப்பதாக கூறப்படும் நிலையில் இது சாத்தியமில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோள் மீது ராகுல் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உண்டு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“குறிப்பாக திமுக மீது காங்கிரஸ் மேலிடம் வைத்துள்ள நம்பிக்கை முழுமையானதாக இல்லை. அதற்குக் காரணம் சில சந்திப்புகள்தான்.

பிரதமர் மோடி – உதயநிதி சந்திப்பு

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்திற்கே சென்று அமைச்சர் உதயநிதி தனிப்பட்ட முறையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியதை காங்கிரஸ் சிறிதும் விரும்பவில்லை. என்னதான் இந்த சந்திப்புக்கான காரணங்களை உதயநிதி அடுக்கினாலும் அதை ராகுல் இதுவரை நம்பவில்லை.

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி சென்னைக்கு வந்த பிரதமர் மோடி அன்று சென்னை புதிய விமான முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு மைசூருக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை ஸ்டாலின் சந்தித்து 25 நிமிடங்கள் வரை பேசினார். தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக பிரதமரை ஸ்டாலின் சந்தித்ததாக செய்தி வெளியானாலும் கூட இதுவும் காங்கிரஸுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி?

மேலும், அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி டெல்லியில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். பின்னர் அன்று சென்னை திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் மும்பை செல்வதற்காக காத்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து 15 நிமிடங்கள் வரை பேசி இருக்கிறார்.

இது எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று என கூறப்பட்டாலும், காங்கிரஸ் இதை அப்படியே நம்பத் தயாராக இல்லை. அவர்கள் நிச்சயம் நடப்பு அரசியல் சூழல் குறித்தும் விவாதித்து இருப்பார்கள் என்றே ராகுல் கருதுகிறார்.

பாஜகவுடன் நெருக்கம் காட்டும் திமுக

ஏனென்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு, அப்போது திமுக குறைந்த பட்சம் 15 எம்பிக்களை வைத்திருக்க நேர்ந்தால் அக்கட்சியின் ஆதரவை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்யும் வாய்ப்புகளும் உண்டு. அது பற்றி கூட அவர்கள் பேசி இருக்கலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

மேலும் தமிழகத்தில் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்ப்பது போல் டெல்லியில் திமுக எதிர்க்கவில்லை. மத்திய அமைச்சர்கள் மூலமும், பாஜக எம்பிக்கள் உதவியுடனும் தங்களுக்கு சாதகமான காரியங்களை திமுக தலைவர்களில் சிலர் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்றும் டெல்லி காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.

நிதிஷ் குமாரை நம்பாத காங்.,

இதேபோல் அடுத்த மாதம் 20-ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கருணாநிதி கோட்டம் திறப்பு விழாவிற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சிறப்பு விருந்தினராக திமுக அரசு அழைத்திருப்பதையும் காங்கிரஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை.

தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டும் என்று நிதிஷ்குமார் விரும்பினாலும் கூட அவரை முழுமையாக நம்புவதற்கு காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறது.

ஏனென்றால் அவர் நான்கு முறை பாஜகவின் ஆதரவில் முதலமைச்சர் ஆனவர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு அவருடைய ஐக்கிய ஜனதாதளம் கட்சி மீண்டும் பாஜக பக்கம் தாவாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

உண்மையிலேயே காங்கிரஸ் மீது திமுக மிகுந்த அக்கறை காட்டுகிறது, தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகிறது என்றால் ராகுலையோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவையோ கருணாநிதி கோட்டம் விழாவிற்கு அழைத்து இருக்கவேண்டும்.

திமுகவிடம் உஷார் காட்டும் திமுக

இதன் காரணமாகத்தான் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்று கொண்ட விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேடையின் இரண்டாவது வரிசையில் உட்கார வைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு விஷயங்களிலும் காங்கிரஸ் மேலிடம் திமுகவிடம் உஷாராகவே இருப்பதை பார்க்க முடிகிறது.

இது தமிழகத்தில் தாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தே ஆக வேண்டும் என்று ராகுல் கெத்து காட்டி திமுகவை கடும் நெருக்கடிக்கு தள்ளுவது போலவும் அமைந்திருக்கிறது”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 420

    1

    0