ரூ.1000 ஏமாற்றமா?…இனிப்பில்லாத பொங்கல் பரிசு..? 2024-ல் இருமடங்காக உயருமா?…

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 10:14 pm

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாள் எப்போதுமே உற்சாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
பொங்கலையொட்டி மாநில அரசும் பரிசுத் தொகுப்பை அறிவித்து குடும்ப அட்டைதாரர்களை குஷிப்படுத்துவதும் நடைமுறையாக இருக்கிறது.

கருணாநிதி கொண்டு வந்த திட்டம்

2009ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை பொங்கல் பரிசாக வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். 2014-ம் ஆண்டு பொங்கல் திருநாளை கொண்டாட அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொகுப்பு பொருட்களுடன் முதல் முறையாக 100 ரூபாய் ரொக்கமும் அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக அதிமுக அரசு 2,500 ரூபாய் வழங்கி அதிரடியும் காட்டியது.

திமுகவின் மறக்க முடியாத பொங்கல் பரிசு

அதேநேரம் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்குவதை அடியோடு நிறுத்தியது.

அதற்கு மாறாக, மாநிலம் முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருக்கும் சுமார் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரிசி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பையும் அத்துடன் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அத்தனை பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் பரிசில் ஊழல்?

பொங்கல் தொகுப்பு பொருட்களுக்காக 1,088 கோடி ரூபாயும், செங்கரும்புக்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட 20 பொருட்களும் தரம் குறைந்த நிலையில் இருந்ததாக பொதுமக்களின் கோபத்திற்கு உள்ளானது.

அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தரமற்ற பொருட்களை வழங்கியதன் மூலம் திமுக அரசு 500 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து விட்டதாக குற்றச்சாட்டுகளை கூறின.

உருகிய வெல்லம்

குறிப்பாக வெல்லம் தார் போல உருகிய நிலையிலும், பச்சரிசியில் சிறு சிறு வண்டுகள் கலந்தும், புளியில் பல்லி இறந்தும் கிடந்தது போன்ற காட்சிகள் பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிய குடும்ப அட்டைதாரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவை அச்சு, காட்சி ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனால் வருகிற பொங்கலுக்கு ரொக்கப் பணமாக வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவரிடமும் எழுந்தது. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.

2023 பொங்கல் பரிசு அறிவிப்பு

இந்த நிலையில்தான் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் 1,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு சுமார் 2 ஆயிரத்து 356.67 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வருகிற 2-ந்தேதி சென்னையில் தொடங்கி வைப்பார். அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்வை தொடங்கி வைப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக கிடுக்குப்பிடி

இன்னொரு பக்கம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் செங்கரும்பு வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கியதை விட திமுக அரசு பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசுப் பணத்தை இரு மடங்கு அதிகரித்து தரும் என்று எதிர்பார்த்து இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் என்பது சற்று ஏமாற்றம் தருவதாகவே அமைந்துள்ளது” என்று சமூக நல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

“ஏனென்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலினும், உதயநிதியும் தொடர்ந்து
கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர்.

இதனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அது தற்போது பொய்த்து போய் விட்டது.மேலும் கடந்த ஓராண்டில் அத்தியாவசிய பொருள் ஒவ்வொன்றின் விலையும் 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனுடன் ஒப்பிட்டால் ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும்.

தவிர இந்தக் கணக்கின்படி பார்த்தால் 2021 பொங்கல் பண்டிகைக்காக அதிமுக அரசு வழங்கிய 2,500 ரூபாய் ரொக்கம் ஒரு மிகப் பெரிய தொகை என்பதையும் மறுக்க முடியாது.

அதற்கு முன்பாக 2019, 2020 ஆண்டுகளிலும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கி இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எனினும், கடந்தாண்டு வழங்கிய 20 பொருட்கள் மீது எழுந்த கடும் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் திமுக அரசின் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு அமைந்திருப்பது உண்மைதான் என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

கரும்பு இல்லாம பொங்கலா?

செங்கரும்பு இல்லாமல் பொங்கல் விழா இனிக்காது என்பது நம் முன்னோர்கள் கூற்று. இதைக் கருத்தில் கொண்டாவது தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக செங்கரும்பை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். இதனால் தமிழக அரசை நம்பி கூடுதலாக செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளும் பயன் பெறுவார்கள். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. எனவே இதற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

அதேபோல நெய்யும் சேர்ந்தால்தான் பொங்கல் மணம் பெறும். இதனால் ஆவின் நிறுவனத்திடம் நெய்யை கொள்முதல் செய்து கடந்த ஆண்டு போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறிதளவு நெய் வழங்கலாம்.

இந்த ஆண்டு பொங்கலின்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பச்சரிசியில் சிறு வண்டுகள், பூச்சிகள் அதிகம் இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் சரமாரி புகார் தெரிவித்ததால் திமுக அரசு இந்த முறை அதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

பரிசுப் பணம் வழங்கும்போது, ரேஷன் கடை ஊழியர்களில் சிலர் 100 ரூபாய் வரை வலுக்கட்டாயமாக கேட்டு பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு கடந்த காலங்களில் கூறப்பட்டது உண்டு. அதையும் களைவதற்கு அரசு நடைவடிக்கை எடுக்க வேண்டும். கூடியவரை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திவிடும் முறையை ஏற்படுத்தி விட்டால் இப் பிரச்சினையை எளிதில் களைந்து விடலாம்.

2024 பொங்கலுக்கு இரு மடங்காக உயருமா?

அதேநேரம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்ட போதெல்லாம் தேர்தல் நேரம் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். 2009 நாடாளுமன்ற தேர்தலையொட்டித்தான், அந்த ஆண்டு கருணாநிதி பொங்கல் பண்டிகைக்காக தொகுப்பு பொருட்களை அறிமுகம் செய்து வழங்கினார் என்றும், 2014 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் பொங்கலுக்கு நூறு ரூபாய் ரொக்கத்தை ஜெயலலிதா அறிவித்தார் என்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 1000 ரூபாயும், கொரோனா பரவல் காலம் என்ற போதிலும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி 2,500 ரூபாயை பொங்கல் ரொக்கப் பரிசாக கொடுத்தார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

இதன்படி பார்த்தால் 2024 என்பது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் ஆண்டு ஆகும். அதனால் அடுத்த வருடம் அதிக அளவில் ரொக்கத் தொகையை வழங்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதி இருக்க கூட வாய்ப்பும் உள்ளது.

எனவே 2024 பொங்கலின்போது ரொக்கப் தொகை 3000 ரூபாய் ஆகவோ அல்லது 4000 ஆயிரம் ரூபாய் ஆகவோ உயர்த்தி திமுக அரசு அறிவிக்குமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூறுகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 492

    0

    0