நெல்லை மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா? நயினார் நாகேந்திரன் மீது புதிய வழக்கு.. அதிரடி ட்விஸ்ட்..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 10:04 pm

நெல்லை மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா? நயினார் நாகேந்திரன் மீது புதிய வழக்கு.. அதிரடி ட்விஸ்ட்..!!

நெல்லை மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் நயினார் நாகேந்திரன், சொத்து விபரங்களை மறைத்ததாக புகார் எழுந்துள்ளது.

தனது வேட்பு மனுவில் அவர் 1500 கோடி ரூபாய் சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்க லசெய்துள்ளதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா புகார் கொடுத்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கொடுத்துள்ள புகாரில், நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஆனால், தனது வேட்பு மனுவில் அது பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

மேலும் பாஜக வேட்பாளரா, சுயேட்சை வேட்பாளரா என்ற விவரத்தையும் பூர்த்தி செய்யவில்லை, அவரது வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு குளறுபடி தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது என்றும், முறையாக செயல்படாத தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2019 தேர்தலின்போது பண பட்டுவாடா புகார்களால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது போல நெல்லையில் இந்த முறை தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நயினார் நாகேந்திரன் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து வெடித்து வருகின்றன. பணப் பட்டுவாடா செய்ததாக புகார், அவருக்காக ரயிலில் ரூபாய் 4 கோடி கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நான்கு கோடி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டு வருகிறது. அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ