அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? அன்பில் மகேஷ்-க்கு சவால் விட்ட பாஜக நிர்வாகி சூர்யா சிவா!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 6:43 pm

திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாது என திருச்சியில் சூர்யா சிவா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி பறவைகள் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளருமான சூர்யாசிவா. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பிடிஓ அலுவலகம் எதிரே காரில் சென்று கொண்டிருந்த பொழுது பின்புறமாக வந்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து தனது காரின் பின்புறம் மோதியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தனது கார் மட்டுமில்லாமல் 4 கார் மீது அந்த பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதன் காரணமாக திருநாவலூர் காவல் நிலையத்தில் ஜூன் 12ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தனது காரின் மீது மோதிய பேருந்திற்கு பர்மிட் இன்சூரன்ஸ் போன்ற எந்தவித ஆவணமும் இல்லை. இதே போல் போலியான ஆவணங்களைக் கொண்டு பர்மிட் இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது வரை ஓடிக்கொண்டு உள்ளது.

தற்பொழுது தனது கார் மீது மோதிய பேருந்தை நான் கடத்திச் சென்றதாக என்மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் என்னை கைது செய்யலாம் இது அனைத்தும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காவல்துறையினரை கையில் வைத்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் எனது மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.

திமுக அரசில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என தமிழக முதல்வர் கூறி வருகிறார். ஆனால் இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க திமுக அமைச்சர்கள் கட்டப்பஞ்சாயத்து இறங்கியுள்ளனர்.

திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு அளவிற்கு நான் பொறுமையாக இருப்பது அதன் பின்னர் அனைவருடைய ரகசியங்களையும் வெளியிட்டு விடுவேன் என கூறினார்.

அமைச்சர் பதவியை விலக்கிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தால் ஒத்தைக்கு ஒத்தை நான் தயார் என்றார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!