அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமா?…அமித்ஷா வருகையால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2023, 9:42 pm
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை குறித்து வரும் 11ம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.
அமித்ஷா தமிழகம் வருகை
பாஜகவின் அரசியல் சாணக்கியர் என வர்ணிக்கப்படும் அமித்ஷா இதில் பங்கேற்பது மாநில பாஜக தலைவர்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது.
அதேநேரம் அவருடைய வருகை அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று கூறப்படுவதுதான், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து
தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அண்ணாமலை விருப்பம்
ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் மாநில பாஜக தலைவர்கள் தீவிரமாக களப் பணியாற்றியும் வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் சுறுசுறுப்புடன் களப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்சென்னை, கோவை, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளை பாஜக குறி வைத்துள்ளது. எனினும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரட்டை இலக்க தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை
மேலிட தலைவர்களிடம் கடந்த ஒரு ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறார்.
அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்
இந்த நிலையில்தான் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தனித்தனியாக அமித்ஷா சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தை
ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இந்த கூட்டணி தொடருமா அல்லது முறிந்துவிடுமா? என்று மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இதனையடுத்து
மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா இருவரின் அழைப்பின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம்தேதி டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரிடமும் நேரடியாக சமாதான பேச்சு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அதிமுக-பாஜக ஒன்றாக இருந்து தேர்தலை எதிர் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றாக செயல்பட்டு திமுகவை வீழ்த்தவேண்டும் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது.
அச்சமயத்தில் இரட்டை இலக்க தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகவும் அதன்படி புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 10 இடங்களை பகிர்ந்துகொள்ள
சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுக்குள் ஓபிஎஸ், டிடிவி?
என்றபோதிலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தால் திமுக கூட்டணியை 39 இடங்களிலும் தோற்கடித்து விட முடியும் என்று டெல்லி பாஜக மேலிட தலைவர்களை தமிழகத்தில் உள்ள சிலர் கடந்த 6 மாதங்களாகவே உசுப்பேற்றி விட்டு வருகின்றனர். இந்த இருவருக்கும் தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் அமோகமான செல்வாக்கு இருப்பதாக அவர்கள் ‘பில்டப்’ செய்தும் வருகின்றனர்.
இதனால் டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்சையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு மூன்று இடங்களை ஒதுக்கி தரவேண்டும் என்று அந்த சிலர் அமித்ஷாவை வலியுறுத்துகின்றனர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானோரும் இந்த யோசனையை இதுவரை ஏற்கவில்லை. இதனால் தொகுதி பங்கீடு செய்வதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில்தான் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மீண்டும் நிகழும்போது இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்சையும், டிடிவி தினகரனையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக விரும்பினால் அதற்கு சில வழிகளும் உண்டு என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவுக்கு கிடைக்கும் வாய்ப்புகள்
அவை இதுதான். “ஓபிஎஸ்சை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தும் டிடிவி தினகரனையும், ரவீந்திரநாத்தையும், வேறு மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி பதவிக்கு பாஜக தேர்வு செய்யலாம். அதன் மூலம் அவர்களின் ஆதரவு வாக்குகளை அதிமுக பாஜக கூட்டணிக்கு கொண்டு வர முடியும். இதை எந்த அளவிற்கு பாஜக ஏற்றுக்கொள்ளும் என்று கூற முடியாது.
அதேபோல எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடி கொள்ளையடித்தற்காக அதிமுக தொண்டர்களிடம் ஓபிஎஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திமுகவை தீய சக்தி என்றும் அவர் பொதுவெளியில் விமர்சிக்க
வேண்டும்.
கூட்டணிக்குள் வர கட்டுப்பாடுகள்
திமுக அரசை அவரோ அவருடைய மகன்களோ புகழ்ந்தும், பாராட்டியும் பேசக்கூடாது. ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததாக அண்ணாமலை வெளியிட்ட பி டி ஆர் ஆடியோ மூலம் கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதற்காக ஓபிஎஸ் வருத்தமும் தெரிவிக்கவேண்டும்.
மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பினால் தனக்கோ, தனது இரண்டு மகன்களுக்கோ ஆதரவாளர்களுக்கோ கட்சியில் எந்த பதவியும் கேட்கக்கூடாது.
என்பது போன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ்ஐ மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் பாஜகவில் இருந்து கொண்டே அக் கட்சிக்கு எதிராக தேசிய அளவில் செயல்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசாமி மற்றும் தமிழகத்தில் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக கூறி தொடர்ந்து பாஜக மீது அவதூறு பரப்பி வரும் நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் எஸ் வி சேகர் போன்றோரை எப்படி அக்கட்சியின் தேசியத் தலைமை ஏற்றுக்கொள்ளாதோ அதேபோல டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத நிலைதான் காணப்படுகிறது.
எனவே அதிமுக கூட்டணி விஷயத்தில், தெளிவான உறுதியான இறுதி முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு பாஜகவின் தேசிய தலைமைக்குதான் உள்ளது.
ஓபிஎஸ்சையும் டிடிவி தினகரனையும் அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் நான்கைந்து தொகுதிகளில் வேண்டுமானால் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம். அதேநேரம் மேற்கு, வடக்கு, மத்திய மண்டலங்களில் அதிமுக மிக வலிமையாக உள்ளது. பாஜகவிற்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதனால் 34 இடங்களில் திமுக கூட்டணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி அதில் குறைந்த பட்சம் 20 தொகுதிகளை கைப்பற்றி விட முடியும்.
திமுக வசம் சீமான்?
ஏனென்றால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளிப்படையான தனது ஆதரவை தெரிவித்தார். அதன் பிறகு திமுக மீதான தாக்குதலை சீமான் தோழமையின் சுட்டுதல் போல் ஆக்கிவிட்டார். கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை வைத்தால் அதை உடைத்தெறிவேன் என்ற அவருடைய வீர முழக்கம் எல்லாம் இப்போது அப்படியே அமுங்கி நீர்த்தும் போய்விட்டது. அதனால் அவருடைய ஆதரவு வாக்குகள் இனி அதிமுக
பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
மேலும் திமுக அரசின் மீதும் தமிழக மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதுவும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று நம்பலாம்.
இதுபோன்ற தகவல்களை எல்லாம் அமித்ஷா தனது கைவிரல் நுனியில் துல்லியமாக வைத்திருப்பார். அதை முழுமையாக ஆய்வு செய்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவர்தான் வரவேண்டும். ஓபிஎஸ்சையும், டிடிவி தினகரனையும் அதிமுகவுடன் ஒன்று சேர்க்கிறேன் எனக்கூறி அதிக வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.