எங்காவது ஒரே சுடுகாடு இருக்கிறதா? செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 6:49 pm

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மாவட்டம் வாரியாகவும், தொகுதிகள் வாரியாகவும் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். அதன்படி இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியக்குளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் கட்சியின் உள்கட்டமைப்பை சீமான் மறுசீராய்வு செய்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். மேலும் பத்திரிகையார் சந்திப்பையும் சீமான் நடத்தினார்.

இந்த வேளையில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக சீமான் கூறியதாவது: இந்தியா விடுதலையாகி 75 ஆண்டுகள் ஆகவிட்டது. தற்போது இருக்கும் சட்டத்தால் எந்த பிரச்சனையாவது வந்துள்ளதா? அமைதி இறையாண்மை, தேச ஒற்றுமை என எதற்காவது பிரச்சனை இருக்கிறதா?. எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டம் தேவையா?. நாட்டில் கல்வி, மருத்துவம், மின்உற்பத்தி, சாலைபோடுதல், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம்.

ஆனால் அதனை விட்டுவிட்டு ஒரே சட்டம், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரோடுனு கவனம் செலுத்துறாங்க. எங்காவது ஒரே சுடுகாடு இருக்கிறதா? ஒரே குளம் இருக்கிறதா? ஒரே கோவில் உள்ளதா?. உங்களுக்கும் சிவன், எனக்கும் சிவன். ஆனால் நீங்கள் பூரி ஜெகன்நாதர் கோவிலில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை உள்ளே விடவில்லை.

அதேபோல் இப்போது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை விடவில்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டத்தால் நாட்டுக்கு என்ன பயன்?.

மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்துள்ள நிலையில் எப்படி பொது சிவில் சட்டம் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கப்படும். இன்று ஏழையாக இருக்கும் சீமான் நாளை அதானி, அம்பானி ஆகிவிடலாம். ஆனால் இன்று பறையராக இருக்கும் சீமான் ஒருநாளும் உயர்ஜாதிக்காரராக மாற முடியாது.

உலகத்தில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் தான் என்ற நிலை உள்ளது” என சாடினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ