எம்பி சீட் உண்டா?…இல்லையா?…திமுகவுக்கு நெருக்கடி தரும் சோனியா!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2022, 7:38 pm
கடந்த சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே எஸ் அழகிரி ஆகியோரிடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.
திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் காங்., பிரமுகர்கள்
இவர்கள் மூன்று பேரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பாராட்டுவதிலும், தமிழக ஆளுநர் ரவியை தாக்கி பேசுவதிலும் தீவிரமாக இருக்கின்றனர். இது ஆச்சரியம் தரும் ஒரு விஷயமாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. மூவருமே சொல்லி வைத்தாற்போல் இப்படி பேசுவதன் பின்னணி என்னவாக இருக்கும்?..என்ற கேள்வியை அரசியல் ஆர்வலர்களிடம் எழுப்பியும் விட்டுள்ளது.
ஆளுநரை வசைபாடும் ஈவிகேஎஸ்
அதிலும் தமிழக ஆளுநரை வசைபாடுவதில், மற்ற இருவரையும் விட ஈவிகேஎஸ் இளங்கோவன் நான்கைந்து படிகள் முன்னே இருக்கிறார் என்பது கண் கூடான விஷயம்.
அண்மையில், சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது, “தமிழகம் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆளுநர் ரவியைத் தூக்கி எறிந்து விட முடியும். ரவியை ஒழிக்க நினைத்தால் எங்களால் விரைந்து செய்து முடிக்க முடியும், ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமை காக்கிறோம்.
ஒரு வாரத்துக்குள் நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரம் ஆகும். ரவியை ரயிலில் டெல்லி அனுப்பி வைத்துவிடுவோம். ஜல்லிக்கட்டு போராட்டம் போல, ஆளுநர் மாளிகை கதவைத் தாண்டி உள்ளே வரும் நிலை ஏற்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
எம்பி சீட்டுக்காக காய் நகர்த்தும் காங்கிரஸ்
இதெல்லாம் எதற்காக?… காரணம் இல்லாமல் போகுமா?… தமிழகத்தைச் சேர்ந்த டெல்லி ராஜ்ய சபா எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாத இறுதியில் முடிவடைகிறது.
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
2021 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எம்எல்ஏவுக்கு போட்டியிட்டு ஜெயித்ததால் தங்களது ராஜ்ய சபா எம்பி பதவிகளை கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் ராஜினாமா செய்தனர்.
இந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
அப்போது வைத்தியலிங்கத்தால் காலியான இடத்துக்கு ராஜேஷ்குமாரையும், கே.பி.முனுசாமியால் காலியான இடத்துக்கு டாக்டர் கனிமொழி சோமுவையும் திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்தது.
திமுகவுக்கு 3 எம்பி சீட் உறுதி
இதில் ராஜேஷ்குமாரின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இந்த 6 எம்பி பதவிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா எம்பியை தேர்ந்தெடுக்க 35 எம்எல்ஏக்களின் ஓட்டு தேவை. இந்த கணக்கின்படி பார்த்தால் 6 எம்பி பதவிகளில் தி.மு.க.வுக்கு மூன்று உறுதியாக கிடைத்து விடும்.
ஸ்டாலினை நெருக்கடி கொடுக்கும் சோனியா
கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்தால் தி.மு.க.வுக்கு நான்காவது எம்.பி.யும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த 4-வது எம்பி பதவியைத்தான் தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டு
காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அரசியல் நோக்கர்கள் கருத்து
தவிர சில மாதங்களுக்கு முன்பு வரை, தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் ஸ்டாலின் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார்.
மேலும் பஞ்சாப் தேர்தலில் காங்கிரசின் படுதோல்விக்கு காரணமான ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவாலுடனும் அவர் நெருங்கிய தொடர்பும் கொண்டிருக்கிறார். இதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 2024 தேர்தலில் காங்கிரசை திமுக முழு மனதுடன் ஆதரிக்குமா?… என்ற அச்சம் சோனியாவுக்கு வந்திருக்கிறது. அதை மறைமுகமாக உறுதி செய்து கொள்ளும் விதமாகத்தான் விரைவில் நடக்க இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடத்தை தமிழகத்தில் திமுக ஒதுக்கவேண்டும் என்று சோனியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
காங்கிரஸ் எம்பி யாரு?
இந்த பதவி சிதம்பரத்திற்கா அழகிரிக்கா, இளங்கோவனுக்கா? என்பது தெரியவில்லை. ஆனால் இது குறித்து தி.மு.க. இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு மேலிடத்தை கட்டாயப்படுத்தி சிதம்பரம் சீட் வாங்கியதால் அவருக்கு இம்முறை ராஜ்யசபா எம்பி பதவி வழங்க காங்கிரஸில் எதிர்ப்புக் கிளம்பலாம். கே எஸ் அழகிரியை பொறுத்தவரை 2019 தேர்தலிலும், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை கேட்டு பெறமுடியவில்லை. இது அவருக்கு மைன்ஸ் பாய்ண்ட். இதனால் அவருக்கும் எம்பி பதவி வழங்கிட வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
காங்கிரசுக்கு அதிர்ச்சி தந்த ஈவிகேஎஸ்
இதுவரை அமைதியாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், திடீரென ஆளுநர் ரவிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பதை காங்கிரஸாரே நம்பவில்லை. அவரும் ராஜ்யசபா எம்பி பதவிக்காத்தான் அடிப் போடுகிறார் என்பதை காங்கிரஸ் மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது. அதனால் அவருக்கு எம்பி பதவி கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.
ஒருவேளை 2024ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய நிதி அமைச்சர் பதவிக்கு தன்னை விட்டால் பொருத்தமான நபர் வேறு யாரும் காங்கிரசில் இருக்கமாட்டார்கள் என்பதால் தனக்கு எப்படியும் திமுக ஆதரவாக நிற்கும் என்று ப.சிதம்பரம் கணக்குப் போடுகிறார்.
கடந்த பிப்ரவரி மாதமே அழகிரியின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக் காலம் முடிந்துவிட்டது. எனினும் இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால் டெல்லி ராஜ்ய சபா எம்பி சீட்டை திமுகவிடம் இருந்து சோனியா தனக்கு பெற்றுக் கொடுத்து விடுவார் என்று கே.எஸ்.அழகிரி உறுதியாக நம்புகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவனும் திமுகவுடன் நெருக்கம் காட்டி எம்பி பதவியை எதிர்பார்க்கிறார்.
கூட்டணிகளிடம் உதவி கேட்கும் காங்கிரஸ்
அதேநேரம் தமிழக சட்டப்பேரவையில் 18 எம்எல்ஏக்களை மட்டுமே, கொண்டுள்ள காங்கிரசுக்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் எம்எல்ஏக்கள் ஆதரவாக ஓட்டு போட்டால் மட்டுமே ராஜ்யசபா எம்பி தேர்தலில் வெற்றி பெற முடியும்.
ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டால் மட்டுமே, காங்கிரசை ஆதரிக்கும் சூழல் உள்ளது. அதேநேரம் திமுகவில் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது குறித்து டெல்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது. டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருப்பவர் ஏ.கே.எஸ். விஜயன். இவருடைய பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது.
தங்கதமிழ் செல்வன் எம்பி ஆகிறார்?
சட்டப் பேரவை தேர்தலின்போது கட்சி தலைமையிடம் இவர் எம்எல்ஏ சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் கேபினட் அந்தஸ்தில் சிறப்பு பிரதிநிதியாக டெல்லியில் நியமிக்கப்பட்டார். இவருக்கு இந்த முறை நாடாளுமன்ற ராஜ்ய சபா சீட் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதேபோல் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் எம்பி சீட் உறுதி என்கின்றனர்.
இவர்கள் தவிர பத்துக்கும் மேற்பட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் எப்படியும் தலைவர் ஸ்டாலின் தங்களுக்கு எம்பி சீட் தந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். எனவே ராஜ்யசபா எம்பி சீட் பெறுவதற்கு திமுகவிலும் பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் திமுக தலைவரான ஸ்டாலின், என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அவர்கள் உண்மையை உடைத்தனர்.
ராஜ்ய சபா எம்பி சீட் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுகவுக்கு கொடுத்து வரும் அழுத்தத்துக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!