திருமா தடம் மாறுகிறாரா?…திமுகவுக்கு வந்த திடீர் ‘டவுட்’
Author: Udayachandran RadhaKrishnan11 November 2023, 6:58 pm
விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி, திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என்று சமீப காலமாகவே கூறி வந்தாலும் கூட ‘உண்மையை பேசுகிறேன், அரசியலை நடுநிலையோடு பார்க்கிறேன்’ என்று திரைப்பட பஞ்ச் டயலாக் பாணியில் அவர் தெரிவிக்கும் சில கருத்துகள் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு தொடக்கம் முதலே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் மட்டுமே அக்கட்சிக்கு எதிர்காலம் இருக்கும், இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பது போல அவர் பேசி வந்ததுதான்.
மேலும் கடந்த மார்ச் மாதம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது “ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பொதுச் செயலாளராக அங்கீகாரம் கிடைத்தது எடப்பாடி பழனிசாமிக்குதான். கட்சியில் எளிய தொண்டனாக இருந்து உயர் பதவியை அடைந்த அவருக்கு எமது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அதிரடி காட்டினார்.
திமுக கூட்டணியில் உள்ள வேறு எந்த கட்சியும் வாழ்த்து கூறாத நிலையில் திருமாவளவன் மட்டும் இப்படி வாழ்த்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து, வெளியேறுவதாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதும், அதை முதல் ஆளாக வரவேற்றதும் அவர்தான்.
இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமின்றி, அந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகளுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது நிஜம். இதனால் விசிக எங்கே அதிமுக கூட்டணிப் பக்கம் தாவி விடுமோ என்று இந்த கட்சிகள் பதறவும் செய்தன.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் மிக அண்மையில் சிதம்பரம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இண்டியா’ கூட்டணியில் உள்ள 26 கட்சிகளில் விசிகவும் உள்ளது” என்று உறுதிபட தெரிவித்தார்.
அத்துடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் கூட தெரியாது, இன்னும் ஒரு படி மேலே போய் “திமுகவை எதிர்க்கும் வலிமை கொண்ட கட்சியாக அதிமுகதான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாஜகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 90 சதவீதம் அதிமுகவின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்தான். அந்த
நான்கு பேரையும் அதிமுக எம்எல்ஏக்கள் என்றே சொல்லலாம்” என்றும் குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது மட்டுமல்ல, தனது ஆதரவு யூ டியூப் சேனல்கள் சிலவற்றில் கூட இதேபோல்தான், திமுகவை எதிர்க்கும் வலிமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு என்று அவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கூறி வருகிறார்.
திருமாவளவன் இப்படி சொல்வது எதற்காக என்பது தெரியாமல் திமுக தலைமை குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவரை சந்தேகக் கண் கொண்டும் பார்க்கிறது.
இதற்கு பின்னணி காரணங்கள் சில இருக்கலாம். ஏனென்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு எம்பி சீட் மட்டுமே ஒதுக்கப்படும், அந்த தொகுதியும் கூட ஏற்கனவே அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிதம்பரமாக இருக்காது, திருவள்ளூரில்தான் போட்டியிடுவார் என்றொரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் அதை மறுக்கும் விதமாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும் போது”சிதம்பரம் தொகுதியில் ஏற்கனவே 5 முறை போட்டியிட்டு, இருமுறை வெற்றி பெற்றுள்ளேன். தொகுதி மக்களுக்கு எதிராக நான் எந்த விதத்திலும் செயல்பட்டதில்லை. சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். எனக்கு எதிரானவர்கள் நான் வேறு தொகுதியில் போட்டியிடப்போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர்” என்று குமுறினார்.
திருமாவளவன் சொல்வதைப் பார்த்தால் அவருக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்படும் என்பது உறுதியாக தெரிகிறது. அதேநேரம் முந்தைய தேர்தலில் விழுப்புரத்தில் வெற்றி பெற்ற விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு இம்முறை அதே தொகுதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அவருக்காக கள்ளக்குறிச்சியை அவர் கேட்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் 2019 தேர்தலில் போட்டியிட்டது போல விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும், அதுவும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதை மறைமுகமாக அறிவாலயத்திற்கு உணர்த்துவதற்காகவே திருமாவளவன், எதிரணியான அதிமுக வலிமையாக உள்ளது, நீங்கள் எனக்கு இரு தொகுதிகளை ஒதுக்காவிட்டால் நாங்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து விடுவோம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார், என்றே கருதத் தோன்றுகிறது.
“பாமகவை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துப் போட திமுக, அதிமுக, பாஜக மூன்றுமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த மூன்று கட்சிகளுமே திரை மறைவில் டாக்டர் அன்புமணியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதில் திமுகதான் முன்னணியில் உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்
“இதனால் திமுக கூட்டணிக்குள் பாமக வந்துவிடுமோ என்ற அச்சமும் விசிகவிடம் ஏற்படுள்ளது.ஏற்கனவே பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் ஒரு போதும் விசிக இருக்காது என்று திருமாவளவன் பலமுறை கூறியிருக்கிறார். அப்படி இருந்தும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து திமுக தலைமை பாமகவுடன் ரகசிய பேச்சு நடத்துவது அவருக்கு கடும் எரிச்சலை கொடுத்திருக்கவேண்டும்.
பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே போக ரெடியாக இருக்கிறோம். எங்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என்பதை அறிவாலயத்திற்கு தெரிவிக்கும் விதமாகத்தான் அதிமுகவை திருமாவளவன் புகழ்கிறார், என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு அவர் செக் வைக்க முயற்சிக்கிறார் என்பதும் வெளிப்படை.
அதேநேரம் திமுக ஆட்சியில் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என்ற மனக்குறை திருமாவளவனிடம் இருப்பதாகவும், சமூக நீதி பற்றி 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி வரும் திமுக ஆட்சியில் பல வன் கொடுமைகள் நடப்பதையும் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு, அதிமுக கூட்டணியில் விசிக சேர்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 2021 தேர்தலின்போது திமுகவிடம் முதலில் விசிக கேட்டது 15 தொகுதிகள். பின்னர் 12 என இறங்கி வந்தது. ஆனால் கூட்டணியில் 13 கட்சிகள் இருப்பதை காரணம் காட்டி ஆறு தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க
திமுக தலைமை மறுத்துவிட்டது.
2026 தமிழக தேர்தலில் திமுகவிடம் என்னதான் மல்லுக் கட்டினாலும்
6 தொகுதிகளுக்கு மேல் ஒரு இடம் கூட கூடுதலாக பெற முடியாது என்பது திருமாவளவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தென் மாநிலங்கள் முழுவதும் தீவிரமாக தனது கட்சியை வளர்க்கத் தொடங்கி இருக்கும் அவருக்கு ஆறு தொகுதிகள்தான் கிடைக்கும் என்றால் அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்பது சந்தேகம்தான். அதனால் குறைந்த பட்சம் 12 தொகுதிகள் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் அதிமுகவிடம் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 27 முதல் 29 சதவீதம் வரை ஓட்டுகளை பெறும் என்று திருமாவளவன் கருதுகிறார்.
அதனால்தான் திமுகவிற்கு அடுத்து வலிமையான கட்சி அதிமுக என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளும், சிறுபான்மையினரின் பெரும்பான்மையான வாக்குகளும் அதிமுகவிற்கே அதிக அளவில் கிடைக்கும் என்பதும் அவருடைய மதிப்பீடாக உள்ளது.
ஒருவேளை பாமகவை, திமுக தனது கூட்டணிக்குள் வளைத்துப் போட்டு விட்டால், உடனடியாக அந்த அணியில் இருந்து வெளியேறி விடலாம். அதிமுக கூட்டணியில் சேர்ந்து குறைந்தபட்சம் நான்கு தொகுதிளை பெற்று அவற்றில் வெற்றியும் காண முடியும் என்று திருமாவளவன் உறுதியாக நம்புகிறார். அதற்கு காரணம் அவருடைய கட்சிக்கு மட்டும் 4 முதல் 5 சதவீத வாக்குகள் இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்திருப்பதுதான்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் விசிக சேர்ந்துவிட்டால் 18 முதல் 22 தொகுதிகள் வரை வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் பாமக இல்லாத நிலையில் பாஜக கூட்டணிக்கு வாக்கு சதவீத இழப்பு நிச்சயம் ஏற்படும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துத்தான் திருமாவளவன் காய்களை நகர்த்துகிறார். திமுகவை மறைமுகமாக எச்சரிக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
என்ன நடக்கப் போகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!