லியோ படத்தில் சர்ச்சை வசனம் : இளைஞர்களின் சீரழிவிற்கு விஜய் காரணமாகலாமா? தமிழக பாஜக எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 4:38 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிரது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாக இரு வாரங்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த அக்டோபர் 5-ம் வெளியான ஒரு திரைப்பட வெள்ளோட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான வசனம் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ் திரைப்படங்களில் இது போன்ற தரக்குறைவான வசனங்கள் தொடர்ந்து இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது. அதிலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் மூலம் இந்த வசனங்கள் வெளிப்படுவது துரதிருஷ்டவசமானது. சமுதாயத்தை திருத்த வேண்டிய பொறுப்புள்ள கலை உலகத்தினர் இளைஞர்கள் மத்தியில் சீரழிவை உருவாக்க காரணமாக அமைந்து விடக்கூடாது. திரைப்பட தணிக்கை துறை இது போன்ற வசனங்களை, ஆபாச காட்சிகளை தணிக்கையின் போது நீக்கினாலும், ஓ.டி.டி தளங்களில் வெளியிடும் போது நீக்கிய காட்சிகளை, வசனங்களை ஒளி, ஒலி பரப்புவது பொறுப்பற்ற செயல். அதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால், “ஐயோ! கருத்து சுதந்திரத்தி‌ற்கு தடையா” என சிலர் கிளம்பி விடுகிறார்கள்.

கடந்த பொங்கலன்று பிரபல நடிகர் நடித்து வெளியான ஒரு திரைப்படத்தில் ‘ ….த’ என முடியும் ஒரு தரக்குறைவான வார்த்தை கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பலரால் நாற்பதுக்கும் மேற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டன. தணிக்கையில் அவை நீக்கப்பட்டன. ஆனால், ஓ. டி. டி தளங்களில் அவை வெளியான போது அந்த வசனங்கள் இடம் பெற்றன. திரைத்துறையின் ஒரு இயக்குனரிடம் இது குறித்து கேட்ட போது, ‘தமிழ் இளைஞர்கள், இப்படிப்பட்ட வார்த்தைகளை நடிகர்கள் சொல்வதை விரும்புகிறார்கள்’ என்று சொன்னது, உண்மையிலேயே திரைத்துறையினர் சமுதாயத்தை எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் நன்னடத்தைக்கு உதாரணமாக விளங்க வேண்டிய பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா? சிந்தியுங்கள் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!