IT, EDயிடம் அடுத்து சிக்கப் போவது யார்?… பரபரக்கும் அரசியல் களம்!…

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 7:29 pm

IT, EDயிடம் அடுத்து சிக்கப் போவது யார்?… பரபரக்கும் அரசியல் களம்!…

கடந்த மே மாதம் முதலே திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் வீடுகள், அலுவலகங்களிலும் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்களிடமும் வருமானவரித் துறையும், அமலாக்கத் துறையும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி விட்டுள்ளது.

இன்னும் ஏழு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அடுக்கடுக்கான இந்த ரெய்டுகள் ஆளும் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பெரும் கவலையை தந்திருக்கிறது, என்பது நிஜம்!

அமைச்சர்களில் முதலில் செந்தில் பாலாஜியும், பின்னர் பொன்முடியும் அவருடைய மகனுமான கௌதம சிகாமணி எம்பியும் EDயிடம் வசமாக சிக்கினர். தற்போது இன்னொரு திமுக எம்பியான ஜெகத்ரட்சகனும் இவர்களது விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார். இதற்கிடையே மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக அறிந்து அங்கும் அமலாக்கத்துறை தன் கரத்தை நீட்டியது.

முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை கடந்த ஐந்தாம் தேதி திடீர் ரெய்டில் இறங்கியது. அவருடைய வீடு, அலுவலகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், சாராய ஆலைகள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ரெய்ட் நடந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இச்சோதனை நீடித்தது.

மூன்றாம் நாளில் சென்னை அண்ணா நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள ஜெகத்ரட்சகனின் உறவினரான பாலசுப்பிரமணியம் ஜெயா மற்றும் குப்புசாமி ஆகியோர்கள் இணைந்து நடத்தி வரும் பரணி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் அலுவலகத்திலும் பாலசுப்பிரமணியம் வீட்டிலும் வருமானவரித்துறை ரெய்ட் நடத்தியது. இதன் முடிவில் ஏராளமான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இவர்களின் சோதனைக்கு இடையே அக்டோபர் 6 ம் தேதி இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்பு மறுநாள் மீண்டும் அதே அதிகாரிகள் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் நாள் வருமான வரி சோதனை நடந்து கொண்டிருந்த போதே அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்ததால் அது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் மருத்துவக் கல்லூரியில் இருந்து கணக்கில் காட்டப்படாத 10 கோடி ரூபாயும், ஜெகத்ரட்சகன் வீட்டிலிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் EDக்கு
எழுந்துள்ளது.

பொதுவாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் நேரத்தில் அமலாக்கத்துறையும் களம் இறங்குவது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்று. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் கூட கடந்த மே மாத இறுதியில் IT நடத்திய 6 நாள் சோதனைக்கு பிறகு அதில் கிடைத்த முக்கிய ஆவணங்களை அமலக்கத்துறையிடம் பரிமாறிக் கொண்ட பின்னர்தான் ஜூன் 13ம் தேதி அமைச்சரின் வீட்டுக்கே சென்று ED தீவிர விசாரணையில் இறங்கியது. பல மணி நேர விசாரணை நடத்தியும் ஒத்துழைக்காத நிலையில்தான் அவரை மறுநாள் அதிகாலை கைதும் செய்தது.

ஆனால் ஜெகத்ரட்சகன் எம்பி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் இது போன்ற ஒத்துழையாமை எதுவும் நடந்ததாக தகவல் வெளியாகவில்லை.

அதேநேரம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் துறைமுக நகரான ஹம்பன்தோட்டாவில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில்
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்கும் அளவிற்கு ஜெகத்ரட்சகனுக்கு எப்படி பணம் வந்தது?… இவ்வளவு பணத்தையும் அவர் எப்படி இலங்கைக்கு கொண்டு சென்றார்? என்ற கேள்விகளும் விஸ்வரூபம் அப்போது எடுத்தன.

இந்த தேடுதலுக்கான் விடைதான் தற்போது 70க்கும் மேற்பட்ட இடங்களில் IT அதிகாரிகள் நடத்திய ரெய்டின்போது சிக்கிய ஆவணங்களில் கிடைத்து இருக்கிறது என்கிறார்கள். இதைத் தொடர்ந்தே ED அதிகாரிகளும் அதிரடியாக களம் இறங்கி இருப்பதும் தெரிய வருகிறது. இதனால் ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறையின் பிடி இன்னும் இறுக வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் தொடர்ந்து ITயும், EDயும் ஒரே நேரத்தில் கைகோர்த்துக் கொண்டு களம் இறங்குவது திமுகவின் சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கே என் நேரு, எ வ வேலு, ஐ பெரியசாமி மற்றும் டி. ஆர். பாலு எம்பி போன்றோர் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என்று தெரிகிறது.

“மத்திய விசாரணை, புலனாய்வு அமைப்புகள் திமுக அமைச்சர்களையும், எம்பிக்களையும் குறி வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரு ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டு அதை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று வெளியான தகவல்தான் தற்போதைய ரெய்டுகளுக்கு அச்சாரம் போட்டது.

ஏனென்றால் முறைகேடாக சம்பாதித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மிகச் சுலபமாக வெள்ளை பணமாக மாற்றி விட முடியும் என்பது வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பணம் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளால் சம்பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த காரணத்தால்தான் அப்போது மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை வருமானவரித்துறை குறி வைத்தது.

ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி சிக்கிக் கொண்டிருந்ததால் அவரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு அது முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.

அதேநேரம் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 82 லட்ச ரூபாய் ரொக்கமும்,13 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளும் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து பல வங்கிகளில் வைப்புத் தொகையாக அவர் போட்டு வைத்திருந்த 42 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கவும் செய்தது. இந்த பணம் 2024 தேர்தல் நேரத்தில் எடுப்பது போல டெபாசிட் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுவதுதான் அமைச்சர் பொன்முடிக்கு தலைவலியாக அமைந்தது.

அது மட்டுமல்லாமல் அவருடைய மகன் கெளதம சிகாமணி எம்பி, சில வெளிநாடுகளில் சட்ட விரோதமாக 100 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடு செய்து இருந்ததையும் அதுவும் தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளியே எடுக்கப்படலாம் என்று கருதித்தான் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மணல் குவாரிகளுக்கே நேரில் சென்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி நான்கு நாட்களில் மட்டும் மணல் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்
15 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்திருப்பதை கண்டுபிடித்தது. இதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1400 கோடி ரூபாய் கொள்ளை யடிக்கப்படுவதை ED உறுதி செய்துள்ளது.

இந்த முறைகேட்டின் பின்னணியில் அரசியல்வாதிகளும் இருப்பதால் தேர்தல் நேரத்தில் அவர்கள் ஆளும் கட்சியின் செலவுக்காக சில நூறு கோடிகளை ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது. இனி அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் மணல் குவாரிகளில் களம் இறங்கலாம் என்று முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் நினைப்பதால் தற்போது குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை அவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது.

ஜெகத்ரட்சகன் எம்பியை பொறுத்தவரை திமுகவின் கருவூலம் என்று கூறும் அளவிற்கு அவரிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின்போது 125 கோடி ரூபாயும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது 350 கோடி ரூபாயும் திமுகவின் செலவுக்காக அவர் கடந்த 4 தேர்தல்களாக கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது வருமானவரித்துறையும், அமலாக்கத் துறையும் திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்துவதால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் மறைமுகமாக திமுக தலைமைக்கு செல்லும் வழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கப்பட்டு வருகின்றன.

அதனால் சந்தேகப் பார்வையின் கீழ் உள்ள திமுக அமைச்சர்கள், மூத்த எம்பிக்கள் மீதான ரெய்ட் பட்டியல் நீள்வதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 434

    0

    0