சட்டத்திற்கு புறம்பாகவே உள்ளது… ஆளுநரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் : திமுகவுக்கு புதிய நெருக்கடி!!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2023, 6:13 pm
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, அதிமுக சார்பில் தமிழக ஆளுனரிடம் கோரிக்கை மனு அளித்து வந்ததாக அதிமுக நிர்வாகிகள், சந்திப்புக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இன்று மாலை ஆளுனர் மாளிகைக்கு சென்று சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், சி.வி. சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் ஆளுநரை சந்தித்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் சி.வி. சண்முகம் பேசுகையில், பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது 24 மணிநேரம் கடந்த பிறகும் அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது, இது தொடர்ந்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.