ஆட்சியே போனாலும் கவலையில்லை சனாதனத்தை ஒழிப்போம்னு உதயநிதி சொன்னது உண்மைதான் : நாராயணன் திருப்பதி கிண்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 7:14 pm

ஆட்சியே போனாலும் கவலையில்லை சனாதனத்தை ஒழிப்போம்னு உதயநிதி சொன்னது உண்மைதான் : நாராயணன் திருப்பதி கிண்டல்!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட 4 மாநிலங்களில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்தது. இந்த நிலையில் தற்போது 4 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில்தான் 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்விக்கு காரணம் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் பேச்சு, சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜகவினர், காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சுத்தான் காரணம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழக பாஜக துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி, “சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது” என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது. ‘INDIA’ கூட்டணியின் 2 அரசுகளை கவலையில்லாமல் பறிகொடுத்து நின்றாலும், போனது தங்களின் ஆட்சி இல்லை என்ற நிம்மதியில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பாவம், அந்த நிம்மதி இன்னும் 4 மாதங்களில் பறிபோய் விடும் என்று தெரியாமல், புரிந்து கொள்ளாமல் சனாதனத்தை ஒழிப்பதற்காக மும்முரமாக, தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், “தெலுங்கானா , மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு கொண்ட ஆட்சியை நடத்த வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளதையும் பாஜக நாராயணன் விமர்சித்துள்ளார்.

“வெற்றி பெறும் கட்சிகள்???? ஓ! அநேகமாக அவர் மழை பற்றிய விஷயத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் தான் அந்த மாநிலங்களில் இந்த தேர்தல்களில் யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரியவில்லை.” என்று நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?