திமுக எம்பி வீட்டில் ஐடி ரெய்டு… பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் ; சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை!!!

Author: Babu Lakshmanan
5 October 2023, 9:07 am

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்ற அதிகாரிகள், வீட்டின் கதவு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்