எங்களை காப்பாற்றியதே அந்த தடுப்பு சுவர்தான்.. முன்னாள் முதல்வருக்கு நன்றி சொன்ன மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 8:57 pm

ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக விஜயவாடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிக அளவில் மழை பெய்து இருப்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஜயவாடாவில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணா நதியை ஒட்டியுள்ள விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி வெள்ளம் பாதிக்காமல் தப்பித்திருக்கிறது.

ஜெகன் மோகன் ஆட்சியில் கிருஷ்ணா நதியின் ஓரத்தில் கட்டப்பட் வெள்ள தடுப்பு சுவர்தான் இதற்கு காரணம். எனவே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்றபோது அப்பகுதி மக்கள் அவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பு சுவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில்தான் கட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இதனை ஜெகன் மோகன் ரெட்டி பயன்பட்டுக்கு திறந்து வைத்தார்.

ஒவ்வொரு பருவமழையின்போதும், கிருஷ்ணா லங்கா பகுதியில் உள்ள 80,000 மக்களை வெள்ளம் பாதித்து வந்தது.

ஆனால் தற்போது விஜயவாடா நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தாலும் இந்த பகுதியில் வெள்ளத்தை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதால் தண்ணீர் பாதிப்பு ஏற்படவில்லை.

அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ₹.500 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்ததோடு அங்கு தடுப்பு சுவர் மட்டுமல்லாது பூங்கா, உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் பகுதி ஆகியவை உருவாக்கப்பட்டது.

இப்படி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு சுவர்தான் இன்று ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது.

இதற்கு ஜெகன் மோகன் ரெட்டியை அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.மேலும் மேலோட்டமாக உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் உட்புறத்தில் உள்ள மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என ஜெகன் மோகனிடம் முறையிட்டனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 241

    0

    0