அன்று நான் நீட் தேர்வை வரவேற்றது தவறுதான்.. திமுகவுக்கு சாதகமாக யூ டர்ன் அடிக்கும் கிருஷ்ணசாமி.!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 1:12 pm
Krishna
Quick Share

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் பலியானார்கள். இந்த மரண ஓலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, அதிமுக 56வது வீதி கீழ் சட்டசபையை ஒத்திவைத்து, விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தது.

இதில் ஏற்பட்ட அமலியால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தமிழக சட்டமன்றத்தில் இதுவரை நடக்காத சம்பவம் அல்ல. இதற்கு முன்பு அவையை ஒத்திவைத்து முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார். எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று 63 பேர்களின் மரணத்திற்கு காரணம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணங்கள் போல் இனி தமிழகத்தில் ஏற்படக்கூடாது. இனிவரும் காலத்தில் நடக்காமல் இருக்க, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒரே தீர்வாகும் என்றார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை தூக்காமல் இருக்க, ஜூலை ஆறாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெறும் என்று கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, அதில் பூரண மதுவிலக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்பு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, பல மாநிலங்களில் நீட் தேர்வை மோசடியை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

நீட் தேர்வை நடத்தும் நடைமுறையில் சட்ட வலுப்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், புதிய பலமான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், அன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. எனவே நேர்மையாக பொதுவான தேர்வு இருந்தால் நல்லது என்று இன்று கருதியதால் நீட் தேர்வு தேவை என்று நினைத்தோம். ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றார்.

நல்ல மாணவர்களுக்கு மருத்துவத் துறைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் ஆதரவு தெரிவித்து இருந்ததாகவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்பாடில்லாமல் தமிழகத்தில் செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

பயிற்சி மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளின் புகைப்படங்களை விதிமுறைகளை மீறி பயிற்சி நிறுவனங்கள் விளம்பரமாக வெளியிடுவது சட்டத்திற்கு புறமானது என்று கூறினார்.

தேர்வுகளில அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை பள்ளியில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.வணிக ரீதியான வியாபார நோக்கில் செயல்பாடு இது என்று கூறிய அவர், பயிற்சி மையங்கள் என்ற பெயரில் பெற்றோர்கள் கோடி கணக்கில் பணம் செலவில் இருப்பதை தடுக்க அரசு முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளிலேயே ஒருங்கிணைந்த பாட முறையை கொண்டு வந்தால் போதுமானது.இதற்காக தனியாக பயிற்சி மையங்கள் தேவையில்லை என்றார்.அரசு பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் தகுதி தேர்வுக்க எப்படி தயார் செய்வது என்பது குறித்து பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும் என்றார்.

பயிற்சி மையங்கள் மூலமாக தேர்வுகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக குற்றம் சாட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி,இதனை தவிர்க்க அன்றாட பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Views: - 90

0

0