இந்தி ஒழிக என்பது அல்ல.. தமிழ் வாழ்க என்பதுதான்.. மொழிப் போர் தியாகிகள் தினத்தில் சீமான் பரபர பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 11:56 am

இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான்.. மொழிப் போர் தியாகிகள் தினத்தில் சீமான் பரபர பேச்சு!

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் உயிர் நீத்த எண்ணற்ற தமிழர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டுவோம். எப்படி வைக்கிறேன் பாரு.. ஆனால் நீ வைக்கும் சமாதி எந்த இடத்துக்கு போகும் என எவனுக்கும் தெரியாது. இது என் நிலம். இது என் நாடு. என் இன அடையாளம்தான் மேலோங்கி நிற்கும். எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர் அடையாளம்தான் இருக்கும்.

இந்திக்கு எதிரான மொழிப் புரட்சி அல்ல.. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப் புரட்சி இங்கு நடந்தது. நாம் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல இந்தி உட்பட. நம்முடைய கோட்பாடு இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான். நான் ஏன் அவர்களது அம்மா ஒழிய வேண்டும் என சொல்ல வேண்டும்? அவன் மொழி அழிய வேண்டும் என நான் ஏன்டா சொல்லனும்? என் மொழி வாழனும்.. என் மொழியை காக்கனும் அதான் என் கோட்பாடு. என் மொழியை சாகாமல் காக்க வேண்டும். அதுதான் கோட்பாடு.

இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என ஏதாவது ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டதா? கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுகிறவர்கள் கூட அவர்களுக்குள் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை.

இந்திய அரசு தெரிவித்த புள்ளி விவரப்படியே 22,000 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகின்றனர். ஆனால் மடாலயங்கள், ஆசிரமங்களில் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!