அன்று நீட்… இன்று ஜல்லிக்கட்டா…? இதையே வேலையா வச்சிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
17 February 2022, 11:34 am

சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, காணொளி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசவிரோதி என்று கூறியதாக குற்றம்சாட்டினார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேச விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதில் உண்மையில்லை என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக இருந்த திமுக இன்று அதிமுகவை களங்கப்படுத்துவதா? எனக் கூறினார். மேலும், அவதூறுகளை பரப்புவது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்றும், அவர் அட்வைஸ் செய்துள்ளார்.

ஏற்கனவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்ததாக மடை மாற்றி விடும் வேளையில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தேர்தலுக்காக ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!