எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம்… சதிவலைகளை அறுத்தெறிவோம்… ஜெ., நினைவிடத்தில் இபிஎஸ் உறுதிமொழி!!
Author: Babu Lakshmanan5 December 2022, 10:56 am
சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கேபி முனுசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதாவது, “மக்களை ஏமாற்ற விடமாட்டோம். பொம்மை முதலமைச்சரே உங்கள் போலி முகத்தை வெளி கட்டுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பவும் என்று சபதம் இருக்கிறோம்.
அம்மாவின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் பல உண்டு. ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகம், மாணவர்கள் வளம் பெற மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் இத்தகைய அற்புதமான திட்டங்களை முடக்கி போட்ட தீய சக்தி ஆட்சியே, அம்மாவின் புகழை மறைக்காதே.
இந்திய சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் நம் ஜெயலலிதா. வருகிற நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட சூளுரைப்போம். நாற்பதும் நமதே.. நாளையும் நமதே.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.. வெற்றி முழக்கம் என்றே திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம்… புரட்சித்தலைவரின் பெரும் புகழையும் புரட்சித்தலைவியின் பெரும் புகழையும் எந்நாளும் போற்றிடுவோம்,” என உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மௌனம் கடைபிடிக்கப்பட்டது.