இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு… நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு : ஒற்றைத் தலைமை சவால் நெருக்கடியில் ஓபிஎஸ்…!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 9:15 pm

சென்னை : வானகரத்தில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வந்தது.

இதனிடையே, நாளை நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், எனவே, நாளை நடக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு இபிஎஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் 23 தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் கூறியதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கட்சியின் சட்ட விதிகளை மீறி செயல்பட மாட்டேன் என்றும் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு, செயற்குழு கூடுவதாகவும், அழைப்பை ஏற்று அனைத்து உறுப்பினர்களும் வந்தடைந்து விட்டதாகக் குறிப்பிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என்று கூறினார்.

வேறு அஜெண்ட ஏதும் இருந்தால் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்ற விதியை காட்டுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பி கேள்வி எழுப்பியது. மேலும், பொதுக்குழுவில் விதிகளை திருத்தம் செய்ய இபிஎஸ் முடிவு செய்து விட்டதாகவும், அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.அப்போது, பொதுக்குழுவில் திடீரென ஒரு விவகாரத்தை எழுப்ப மாட்டார்களா..? என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினர்.

பொதுக்குழுவில் முடிவெடுப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் என்றும், முன்மொழிவுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தந்த பிறகே, பொதுக்குழுவில் வைக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதியில்லை என்றும், வழக்கமான பணிகள் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொதுக்குழுவில் நடக்கலாம் என்ற மனநிலையில் செல்ல முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனைக் கேட்ட இபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவுக்கு எதிர்பார்ப்புடன் உறுப்பினர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என இப்போதே கூறுவது முதிர்ச்சியற்றது என்றும், கூட்டத்தில் என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.

காரசாரமான விவாதம் சுமார் 3 மணி நடைபெற்ற நிலையில் தீர்ப்பை நீதிபதி சற்று நேரம் ஒத்திவைத்தார். அதன்படி வானகரத்தில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது.

மேலும் பொதுக்குழுவுக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே போல பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதை முடிவு செய்வது கட்சிதான் என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறியுள்ளது.

நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 520

    0

    0