ஜூன் 4.. தேர்தல் முடிவு நாள் மட்டுமல்ல : அண்ணாமலைக்கும் முக்கியமான நாள்.. கிடைக்குமா டபுள் ட்ரீட்?!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2024, 7:45 pm
ஜூன் 4.. தேர்தல் முடிவு நாள் மட்டுமல்ல : அண்ணாமலைக்கும் முக்கியமான நாள்.. கிடைக்குமா டபுள் ட்ரீட்?!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்றது முதலே ஆளும்கட்சியான திமுகவை ஆட்டம் காண வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
திமுக குறித்த ஊழல் பட்டியலான திமுக பைல்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திமுகவில் உள்ள அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் கூறும் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகிறார்.
அண்ணாமலை பாஜக தலைவரானது முதலே பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் அதிக அளவில் பாஜகவில் இணைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி அண்ணாமலை என்ற ஒற்றை ஆளுமையால் பாஜகவில் நிறைய மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஏற்பட்டு வருவது நிதர்சனமான உண்மை என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை தமிழக பாஜக அதிமுகவுடன் கூட்டணி போட்டு சந்தித்தது. என்னதான் அந்த கூட்டணி தோல்வியடைந்தாலும், தமிழகத்திற்காக 4 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளது பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் இந்த கூட்டணி கடந்த 2023ஆம் வருடம் உடைந்துவிட்டது. இந்த கூட்டணி உடைந்தாலும், ஆளும்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளதாக விமர்சித்து வருகிறது.
ஆனால் இதை அதிமுக முற்றிலும் மறுத்து வருகிறது. இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக, பாஜக தனித்தனியே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
குறிப்பாக பாஜகவுடன் ஓபிஎஸ் அணி, சரத்குமார் கட்சி, டிடிவி தினகரன், ஜிகே வாசனின் தா,ம.க போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதே போல அதிமுகவுடன் எஸ்டிபிஐ, பார்வேட் பிளாக் கட்சி போன்ற சிறு சிறு கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் பாமக, தேமுதிக கட்சிகள் மட்டும் இன்னும் தங்களது நிலைப்பாட்டையே தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் தான் இன்று நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகிறது.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து பின்பு தேர்தல் முடிவுக்காக 45 நாள் காக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனிடையே தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக 3வது முறையாக வென்று ஹேட் டரிக் சாதனை படைக்கும் என்று கூறப்பட்டது. மத்தியில் 3வது முறையாக மோடியே பிரதமர் ஆவார் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவே இந்த முறை அதிக எம்பிக்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் அதிகரிக்கும் என்றே பல கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளது.
ஆனால் நிச்சயமாக தமிழகத்தில் பாஜக வெல்லும், 40 எம்பிக்களை பெறும் என அண்ணாமலை கூறி வருகிறார். ஒருவேளை இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியுற்று, மத்தியில் வென்றாலும், அண்ணாமலைக்கு பிரதமர் மோடி தரும் பரிசு என்றே எடுத்துக்கொள்ளலாம்.
ஏனென்றால் ஜுன் 4 தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நாள் மட்டுமல்ல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளும் கூட. ஜூன் 4 அண்ணாமலைக்கு டபுள் ட்ரீட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0
0