இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2024, 11:33 am
இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் எழை, எலியோருக்கு வழங்கும் திட்டத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் 50 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுகள் வழங்கினார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக தலைமையிலான அரசு செய்து வருகிறது, நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மதுரை மாஸ்டர் பிளானில் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் நீக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர்களின் மனசாட்சிப்படி கூற வேண்டும்.
திமுக நீட் தேர்வை ரத்து செய்ய 3 ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முதல்வர் அவருடைய 3 ஆண்டுகால ஆட்சி குறித்து மிகைப்படுத்தி தான் பேசுவார்.
ஆனால் மக்களுடைய முகத்தை பார்த்தால் எவ்வளவு வேதனை, கோபத்துடன் உள்ளார்கள் என தெரியவரும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மக்களிடம் 300 ஆண்டுகளில் ஏற்றப்பட வேண்டிய சுமைகள் 3 ஆண்டுகளில் திமுக ஏற்றியுள்ளது, கோடை காலங்களில் மின் பற்றாக்குறை சமாளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில அபகரிப்பு என்பது திமுகவின் முகவரியாக உள்ளது, திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் நிலங்களை அபகரிக்கும் வேலைகளை செய்யும், திமுகவிடரிடம் நிலங்களை பறிகொடுத்த மக்கள் அச்சப்பட தேவையில்லை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலங்கள் திருப்பி வழங்கப்படும்.
நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மரணம் தற்கொலையா? கொலையா? என தெரியவில்லை, காவல்துறை விசாரணையில் அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என தெரியவில்லை.
காவல்துறையே சுதந்திரமாக செயல்பட விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்படுவார், நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கில் காவல்துறை செயலிழந்து நிற்கிறது என கூறினார்