நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் சென்னை வருகை : பீதியில் 3 அமைச்சர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 8:07 pm
Quick Share

திமுக அமைச்சர்களுக்கு இது போகாத காலம் போலிருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக கடந்த ஆறு மாதங்களாக சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைபட்டு கிடக்கிறார்.

மிக அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்ததோடு பொன்முடிக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்றாண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் மூன்றாண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார் என்பதும் உறுதி. இதனால் திமுக ஆடிப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தலைவலியை தரும் விதமாக இன்னொரு சோதனையும் வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம் பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட சிறப்பு நீதிபதியாக இருந்த ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்முடி மற்றும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்த படியாக வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக இடம் ஒதுக்கீடு செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு கையில் எடுத்தார்.

அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீதான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் சட்ட விதிகளை மீறி அவசர அவசரமாக விசாரணை நடத்தி விடுதலை செய்துள்ளன. இதை நீதித் துறையில் இருக்கும் என்னைப் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் இவர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கான காரணத்தையும் நீதிபதி விளக்கினார்.

மேலும் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளால் நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிரான பழைய வழக்குகளை மீண்டும் விசாரிப்பதால் என்னை சிலர் வில்லனாக பார்ப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்வேதனை தெரிவித்தார்.

அத்துடன் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளை அவர் விசாரிக்கவும் தொடங்கினார். இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இது வழக்கமான நடைமுறைதான். அதாவது 3 மாதத்துக்கு ஒருமுறை நீதிபதிகள் இப்படி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள சில நீதிபதிகள், 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர்கள் சென்னைக்கும் இடமாறுதல் செய்யப்படுவார்கள்.
அதனடிப்படையில்தான் ஆனந்த் வெங்கேடஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அக்டோபர் மாதம் மாற்றப்பட்டார்.

இதனால் அவர் விசாரித்து வந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகளின் துறைகளை மாற்றம் செய்தும், இடமாறுதல் செய்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டு
இருக்கிறார்.

குறிப்பாக ஜனவரி மாதம் முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதான் திமுக தலைமைக்கும், வழக்குகளில் சிக்கிய அமைச்சர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்து விட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கும் அரசியல் ரீதியான நெருக்கடிகளையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

ஏனென்றால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்குகள் என்பதால் இவற்றின் மீதான விசாரணையை மீண்டும் தொடங்கி அவற்றை விரைந்து முடித்து அதன் மீது ஓரிரு மாதங்களுக்குள் தீர்ப்பளிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இது தவிர குவாரிகளில் நடந்த மணல் கொள்ளை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனும், சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் எந்த நேரமும் வரலாம் என்ற நிலையும் காணப்படுகிறது. இவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை பாய்ந்தால் சிறைக்கு செல்லும் திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை
6 ஆக உயரலாம்.

மேலும் கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்
ஓ ராஜா உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் 2012ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறும்போது, “ஆட்சிக்கு ஏற்றாற்போல் லஞ்ச ஒழிப்புத்துறை தன்னை மாற்றி பச்சோந்தியாக மாற்றிக் கொள்கிறது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு நற்சான்று வழங்கியும் இருக்கிறது.
இதுமாதிரி வேறு எங்காவது நடந்ததை கேள்விப்பட்டதுண்டா? இது ரொம்பவும் கேலிக்கூத்தானது.
இதேபோன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று கடும் அதிருப்தியும் தெரிவித்து இருந்தார்.

திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,
ஐ பெரியசாமி ஆகியோர் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதுகூட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த அளவிற்கு காட்டமாக கருத்து தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் கீழமை நீதிமன்றத்தை ஓபிஎஸ் தன்னிடம் இருந்த அமைச்சர் அதிகாரத்தை எந்த அளவிற்கு தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதை நீதிபதியின் கருத்து மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஓபிஎஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விரைந்து நடத்தி மார்ச் மாதத்துக்குள் தீர்ப்பளித்து விட்டால் அவருடைய அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல, அவரது இரு மகன்களின் அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி விழுந்து விடும் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

ஏற்கனவே 2019 தேர்தலில் தேனி தொகுதியில் ஓ ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடையை அவர் பெற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து விட்டாலும் ரவீந்திரநாத்துக்கு சிக்கல்தான்.

அதேபோல ஓ பன்னீர்செல்வத்தின் மீதான மறு வழக்கு விசாரணையிலும் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தாலும் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் அவர் மட்டுமின்றி அவருடைய இரு மகன்களும் போட்டியிட முடியாத நிலைதான் ஏற்படும்.

டிடிவியுடனும், பாஜகவுடனும் கூட்டணி அமைத்து 2024 தேர்தலை சந்திக்கலாம் என்ற ஓபிஎஸ்ன் எண்ணமும் இதனால் தவிடு பொடியாகலாம்.

இது மாதிரியான குற்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும்.

ஏனென்றால் இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வெகுவாக பாராட்டினார். அவர் கூறும்போது” நீதித்துறையில் ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று பெருமிதப் படவும் செய்தார்.

இதுபோன்ற நிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,
ஐ பெரியசாமி முன்னாள் அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், வளர்மதி போன்றோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 518

    0

    0