பெரம்பலூரில் களம் இறங்கும் ஜோதிமணி?…செந்தில் பாலாஜி மோதலால் கரூர் அவுட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 9:43 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கும்பகோணத்தில் நடந்த கட்சியின் தேர்தல் பயிற்சி பாசறையில் பேசும்போது தெரிவித்த சில கருத்துக்கள் காங்கிரஸ் நிர்வாகிகளின் வயிற்றில் புளியை கரைத்து விட்டு இருக்கிறது.

அதில் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேசிய தலைமை நினைப்பதுபோல் 20 எம்பி சீட்கள் கிடைப்பதெல்லாம் மிக மிகக் கடினம் என்பதை சூசகமாக குறிப்பிட்டும் இருக்கிறார்.

கேஎஸ் அழகிரி டோஸ்

மும்பையில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் அவர் இப்படி மறைமுகமாக பேசி இருப்பதுதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவிட்டு இருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசும்போது, “கட்சி தலைமை தமிழகத்தில் தலைவரை மாற்றி விடும் என பலரும் பேசினர். மாற்றம் என்பது எல்லா நிலைகளிலும் வரும். ஆரம்பம் இருந்தால் முடிவும் இருக்கும். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. இண்டியா அமைப்பு ஆட்சியை கைப்பற்றவதுதான் முக்கியம்.

மாநிலத்தில் ஆணித்தரமாக எதிர்த்து பேசினால்தான் ஆர்எஸ்எஸ்.,பாஜக உள்ளே வராது. தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்எல்ஏ. எம்பி., ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால், நீங்கள் நினைப்பது நடக்கும். தமிழகத்தில் கூட்டணி பலமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் பரபரப்பு

2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 410 தொகுதிகளில் வலிமையான பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தவேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வற்புறுத்தப்பட்டு அது தொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மட்டும் 270 இடங்களுக்கும் குறையாமல் போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 140 இடங்கள் என்று பங்கீடு செய்து கொண்டால் 285 தொகுதிகள் வரை எளிதில் வெற்றி பெற்று விட முடியும் என்பது
இண்டியா கூட்டணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த நிலையில் கே எஸ் அழகிரி இரண்டு முக்கிய விஷயங்களை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்கிறார். அதன் மூலம் தேசிய அளவில் காங்கிரஸின் போக்கு எப்படி இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.

தலைவர் பதவி பறிப்பு?

அதாவது தமிழகத்தில் புதுச்சேரியையும் சேர்த்து 2019 தேர்தல் போலவே காங்கிரசுக்கு பத்து இடங்களுக்கு மேல் ஒரு எம்பி சீட்டு கூட வழங்கப்படமாட்டாது. காங்கிரஸ் மேலிடம் விரும்புவது போல் 20 தொகுதிகளை திமுக ஒதுக்குவதற்கு சான்சே இல்லை என்பதையும் அழகிரியின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்பி ஆகிவிடலாம் எம்எல்ஏ ஆகி விடலாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் கனவு காண வேண்டாம் என பேசுவதன் மூலம் அதை அவர் உறுதியும் செய்து இருக்கிறார். அதேநேரம் தனது தலைவர் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்பதை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.

காய் நகர்த்திய ஜோதிமணி

அவருடைய இந்த பேச்சால் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில சந்தேகங்கள் எழாமலும் இல்லை. அதில் மிக முக்கியமானது அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் ஜோதிமணி எம்பிக்கு மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?…கரூரை திமுக எடுத்துக் கொண்டால் ஜோதிமணி யின் நிலைமை கேள்விக் குறியாகி விடுமே? காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?…

அதேபோல், ஒருவேளை திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்து விட்டால் அவருக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. அதை திமுக ஒதுக்குமா? காங்கிரஸ் ஒதுக்கித் தருமா?.. என்ற சிக்கலான கேள்விகளும் எழுகின்றன.

“இது பற்றியெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் சில மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசி உறுதி செய்து கொண்டு விட்டார்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

செந்தில்பாலாஜி – ஜோதிமணி மோதல்

ஏனென்றால் ராகுல் நடத்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது ஆரம்பம் முதல் அது முடியும் வரை அவருடன் இருந்தவர் தமிழகத்தில் ஜோதிமணி எம்பி மட்டுமே. அதனால் ராகுலின் குட் புக்கில் அவர் இடம் பிடித்துவிட்டதும் உண்மை.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, தான் கரூர் தொகுதியில் போட்டியிட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜியால் தனக்குப் பெரும் குடைச்சல் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டு அந்தத் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட விரும்பும் ஆர்வத்தை ராகுலிடம் தெரிவிக்கவில்லை.

மாறாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதியை திமுகவிடம் கேட்டு எனக்கு பெற்றுத் தாருங்கள். அதுவும் கரூருக்கு பக்கத்து தொகுதிதான். அங்கு போட்டியிட்டாலும் என்னால் சுலபமாக ஜெயித்துவிட முடியும் என்று ராகுலிடம் ஜோதிமணி சம்மதமும் பெற்று விட்டார்,
என்கிறார்கள்.

அமைச்சர் மகனுக்கு கரூர் தொகுதி?

அதனால் அமைச்சர் நேரு, தனது மகன் அருணுக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கித் தருமாறு முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் ஜோதிமணி பெரம்பலூரில் போட்டியிட விரும்புவதை தெரிந்துகொண்டு தற்போது கரூர் தொகுதியை கேட்டு வருகிறார். அனேகமாக இதற்கு திமுக தலைமை ஒப்புதல் அளித்துவிடும் என்றே தெரிகிறது.

அதேநேரம் வைகோவின் மதிமுகவுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். 2019-ல் மதிமுக போட்டியிட்ட ஈரோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை நிறுத்தி, கோவை தொகுதியை நடிகர் கமல்ஹாசனுக்கு ஒதுக்குவதற்கு திமுக சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

கமலுக்கு டிக்… வைகோ மகனுக்கு அல்வா?

ராகுல் காந்தியிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி நடிகர் கமல்ஹாசன், இப்படி காரியத்தை சாதித்துக் கொண்டு இருக்கிறார். கமலின் மக்கள் நீதி மய்யம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இன்னும் இணையவில்லை என்றாலும் கூட ஏற்கனவே செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி கோவை தொகுதி அவருக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது.

ஒருவேளை வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றால் அதில் திமுகவுக்கு பிரச்சினையே கிடையாது. திமுகவின் தேர்தல் சின்னத்தில்தான் துரை வைகோ போட்டியிடுவார் என்பதால் அவருக்கு தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியை திமுக தர முன் வரலாம். அல்லது ஒரே நேரத்தில் ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டாம் என்று திமுக நினைத்தால் உங்களது ராஜ்ய சபா எம்பி பதவி காலம் முடிந்த பிறகு உங்கள் மகனுக்கு அந்த வாய்ப்பை தருகிறோம் என்று கூறி திமுக வைகோவை சமாதானப்படுத்தவும் செய்யலாம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் ஒரு எம்பி சீட்டுக்காக இப்படி பிரபல தலைவர்கள் முட்டி மோதிக் கொள்வது வேடிக்கையாகத்தான் உள்ளது!
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • raakayi teaser update தனுஷ் வழியில் நயன்தாரா..புதிய படத்தின் அப்டேட் வெளியீடு..!
  • Views: - 347

    0

    0