திறந்து 5 நாள் கூட ஆகல.. கலைஞர் பூங்காவில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2024, 8:05 pm

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் ஜிப்லைன் பழுதால் அந்தரத்தில் பெண்கள் சிக்கிக் கொண்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு.

இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு.

பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!