கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர்களை கைது செய்யாதது ஏன்..? அரசு துணை போக வேண்டாம் : எச்சரிக்கும் சீமான்..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 1:48 pm

சென்னை : மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுமைக்கு எதிராக மாணவிகள் வீதியில் இறங்கி போராடியும், தொடர்புடைய ஆசிரியர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல் ஒருதலைச்சார்பாக நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளும், தேசிய மகளிர் ஆணையமும் புகாரளிப்பதும் பின் அதனைத் திரும்பப்பெற்றுக் கொள்வதுமான தொடர் நிகழ்வுகள், குற்றவாளிகளைப் பாதுகாக்க திரைமறைவில் கல்லூரி நிர்வாகம் அதிகார அச்சுறுத்தலின் மூலம் மிகப்பெரிய அழுத்தம் அளிப்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அநீதிக்கு எதிராகப் போராடும் மாணவிகளின் அறப்போராட்டம் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?