பெண் வட்டாட்சியரை அசிங்கமாக திட்டிய விசிக நிர்வாகி… கை, கால்களை வெட்டுவேன் என பகிரங்க மிரட்டல் ; அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
17 May 2023, 12:55 pm

கள்ளக்குறிச்சி அருகே பெண் வட்டாட்சியரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம் அருகே அ.வாசதேவனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதியின்றி கட்சி கொடிக்கம்பத்தை நட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் இந்திரா, அந்தக் கொடி கம்பத்தை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஆத்தரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். அப்போது, விசிக மாவட்டச் செயலாளர் தனபால், மேஜிஸ்திரேட் என்றால் என்ன, வெளியே போ… என்று ஒருமையில் திட்டினார். மேலும், எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டினார்.

போலீசார் சுற்றி இருக்கும் போதே, பெண் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் விசிக மாவட்டச் செயலாளர் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?

உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ