விடுதலை சிறுத்தைகள் மீது திடீர் கோபம்… திமுகவிடம் கொந்தளித்த கமல்ஹாசன்.. கூட்டணியில் திடீர் சலசலப்பு!!
Author: Babu Lakshmanan9 February 2023, 9:46 pm
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று கட்சியின் நிர்வாகிகள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ வி கேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏனென்றால் கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது இதே தொகுதியில் கமல் கட்சிக்கு 10 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்திருந்தது. அப்படி இருந்தும் கூட தனது கட்சியின் செல்வாக்கை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க இப்போது அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான்.
கமல்ஹாசனை புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் அவருடைய சமீப கால அரசியல் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுதான் 2018-ம் ஆண்டு அவர் மக்கள் நீதி மய்யத்தையே தொடங்கினார்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு, அதிமுக ஆட்சியை சமூக வலைத்தளங்களில் கமல் தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு அவரது கட்சி 16 லட்சம் ஓட்டுகளை வாங்கியது. ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாரிவேந்தர் எம்பியின் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் கூட 10 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
இந்த இரு தேர்தல்களிலும் கமல் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு அவர் கடும் போட்டி அளித்தார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை 3-வது இடத்திற்கும் தள்ளினார். அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலின்போது 3.7 சதவீத ஓட்டுகளை வாங்கி இருந்த அவருடைய கட்சி சட்டப்பேரவைத் தேர்தலின்போது 2.47 சதவீதத்துக்கு சரிந்தும் போனது.
அதன்பிறகு நடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் போதும் கமல் கட்சிக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றி கிடைத்ததாக தெரியவில்லை.
சினிமாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசியலில் இறங்கி ஆழம் தெரியாமல் காலை விட்டு கரைத்து விட்டோமே என்று மனம் வருந்தி, படங்களில் நடிப்பது, பிக் பாஸில் பங்கேற்பது ஆகியவற்றில் மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறார். அவரை நம்பி மக்கள் நீதி மய்யத்திற்கு வந்தவர்களும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர்.
அதேநேரம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக கூட்டணிக்குள் நுழைந்துவிட்டால் எப்படியாவது ஒரு எம்பி சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கட்சியை கமல் நடத்தி வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.
அதனால்தான் அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவை தெரிவித்தார் என்று கூறப்படுவதும் உண்டு. ஏற்கனவே ராகுல் அழைத்ததன் பேரில் டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். அங்கு ராகுல் வீட்டிற்கும் சென்றிருந்தார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு என்ற நிலைப்பாட்டை கமல்ஹாசன் எடுத்து இருக்கிறார் என்பார்கள்.
அவர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்ற விசிக தலைவர் திருமாவளவன் நாசூக்காக கமல் கட்சியை கிண்டலும் செய்தார். அது ஏதோ வேண்டா வெறுப்பாக தெரிவித்த கருத்து போலவும் இருந்தது
“எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதேநேரம் அக்கட்சியின் வாக்கு வங்கி கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என நான் கருதவில்லை” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
திருமாவளவன் இப்படி சொல்லி சில நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அதன் அர்த்தத்தை கமல் இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறார், போலிருக்கிறது.
இதனால் மனதுக்குள் புலம்பித் தவித்து வந்த கமல்ஹாசன், தனது கட்சியின் நிர்வாகிகள் மூலம் இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்யும்படி அறிவாலயத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அறிவாலயம் சென்று திமுக தலைமையிடம் நேரடியாக புகாரையும், வேதனையையும் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, “கூட்டணிக்குள் இருக்கும் கட்சியை எதிர்க்கட்சி போல் பாவித்து திருமாவளவன் இப்படி பேசியது சரிதானா?” என்று கொதிப்படைந்து அவர்கள் கேள்வி எழுப்பியும் இருக்கிறார்கள்.
இதைக் கேட்ட திமுக தலைமை “உங்கள் வருத்தத்தை நாங்கள் நிச்சயம் திருமாவளவனிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவர் அப்படி பேசியதற்கு காரணத்தையும் கேட்கிறோம். இனி வருங்காலத்தில் இப்படி நடக்காத மாதிரி பார்த்தும் கொள்கிறோம்” என உறுதி அளித்துள்ளனர், என்கிறார்கள்.
இனியும் இது தொடர்ந்து நீடித்தால் கமல்ஹாசனே நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூத்த அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?…
“மக்கள் நீதி மய்யம் கட்சியை, திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு கடந்த சில மாதங்களாகவே, அறிவாலயம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் கமல்ஹாசன் எந்த பிடியும் கொடுக்கவில்லை. அதேநேரம் காங்கிரஸ் தலைமை வழியாக கூட்டணிக்குள் நுழைந்தால் திமுகவிடம் ஒரு எம்பி சீட்டையாவது வாங்கிவிடலாம் என்பது கமலின் கணக்கு.
எனினும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அரசியலை திமுக குறி வைப்பதால் 32 தொகுதிகள் வரை அக்கட்சி போட்டியிட விரும்பும் என்பது நிச்சயம்.
அதனால் காங்கிரசுக்கு 6 சீட்டுகள், மார்க்சிஸ்டுக்கு ஒரு தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு எம்பி பதவி ஒதுக்கவும் மற்ற கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிட விரும்பினால் போட்டியிட்டு கொள்ளலாம் என்று அறிவிக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதேநேரம் இந்த மூன்று கட்சிகளுக்கும் எம்பி சீட் மறுக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஒருவேளை விசிகவுக்கு மட்டும் மாநிலங்களவையில் ஒரு எம்பி பதவியை திமுக தர முன் வரலாம்.
இந்த குழப்பமான சூழ்நிலைக்கு மூல காரணமே திமுக கூட்டணிக்குள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அடியெடுத்து வைத்திருப்பதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
இதனால்தான் தனது கட்சியை மெல்ல மெல்ல திமுக புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் திருமாவளவனுக்கு தற்போது எழத் தொடங்கி இருக்கிறது. எனவேதான்
வேங்கை வயல், திருமலைகிரி பகுதிகளில் பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதி குறித்து திமுக அரசை அவர் தீவிரமாக விமர்சிக்கவும் செய்கிறார்.
ஆனால் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலரோ, கடந்த ஜனவரி மாதம் 22 ம் தேதி நடந்த பிக் பாஸ் இறுதிச்சுற்றில் சின்னத்திரை நடிகரும், விசிகவின் செய்தி தொடர்பாளருமான விக்ரமன் இடம் பிடித்திருந்தார். அப்போது விக்ரமனுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என்று திருமாவளவன் டிவி ரசிகர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் பங்கேற்கிற ஒரு நிகழ்ச்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன் என்று திருமாவளவன் ஏளனம் செய்தும் இருந்தார்.
அதனால் இப்போது அவர் வைத்த வேண்டுகோளை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் அசீம் முதலிடம் பிடித்தார். விக்ரமனுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவராக திகழும் திருமாவளவனின் கோரிக்கையை டிவி ரசிகர்கள் புறக்கணித்து விட்டதை மனதில் வைத்துதான் மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அவர் கேலி பேசுகிறார் என காரணம் சொல்கின்றனர்” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அட, இதிலும் இவ்வளவு உள்குத்து வேலை இருக்கிறதா?…
0
0