ராகுலுக்கு அல்வா கொடுத்த கமல்! காங். அழைத்தால் பிரச்சாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 9:19 pm

ராகுலுக்கு அல்வா கொடுத்த கமல்! காங். அழைத்தால் பிரச்சாரம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், தமிழ் திரைப்படங்களில் சாதித்த அளவிற்கு அரசியலில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். கடந்த 6 ஆண்டுகளில் அரசியல் களம் அவருடைய கட்சிக்கு ஒரு சிறிய அளவில் கூட பயனைத் தரவில்லை என்பதும் நிஜம்.

எப்படியாவது மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு விட வேண்டும் என்ற அவருடைய லட்சிய கனவு இதுவரை அவருக்கு பலிக்காத ஒன்றாகவே இருக்கிறது.

2021-ம் ஆண்டு தமிழகத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1700 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியதால் இம்முறை இண்டியா கூட்டணியில் எப்படியும் கோவை தொகுதியை வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டார். இதற்காக முன்கூட்டியே திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார்.

ஆனாலும் அவரை திமுக கண்டுகொள்ளவே இல்லை. இதனால் ராகுல் காந்தியுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி தமிழக காங்கிரசிடம் தென் சென்னை, கோவை தொகுதிகளை கேட்டு பெற்று விடலாம் என்று கமல் காய்களை நகர்த்தியும் பார்த்தார். அதுவும் கை கூடவில்லை.

ஏனென்றால் தமிழக காங்கிரசே குட்டிக்கரணம் போட்டுத்தான் திமுகவிடம் ஒன்பது தொகுதிகளை வாங்கியது. இதனால் கமலுக்கு இரண்டு எம் பி சீட்டுகளை தாரை வார்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. அப்படியே கொடுத்தாலும் கூட தங்கள் கட்சியின் கை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று டெல்லி மேலிடம் அவருக்கு அழுத்தமும் கொடுத்தது. ஆனால் கமலோ தனது மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டி என்பதில் மிக உறுதியாக இருந்தார். இதனால் காங்கிரசும் அவரைக் கைகழுவியது.

என்றபோதிலும் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ள இரண்டரை சதவீத வாக்குகள் வேறு பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக 2025ல் ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக உறுதியளித்து கமலை இண்டியா கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த பிப்ரவரி மாதம் வரை வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் மார்ச் ஒன்பதாம் தேதிக்கு பின்பு அவர் கப்சிப் ஆகிவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் கடந்த ஏப்ரல் 12ம்
தேதி கோவை நகரில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கமல் புறக்கணித்தும் விட்டார். இத்தனைக்கும் அவரை அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனாலும் கமல் அசைந்து கொடுக்கவில்லை.

இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை 30 தொகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகள் பக்கம் அவர் எட்டிப் பார்க்கவே இல்லை.

திமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் சென்ற கமல், அருகிலேயே காங்கிரஸ் போட்டியிடும் கரூருக்கு செல்லவில்லை. விசிக போட்டியிடும் சிதம்பரத்துக்குச் சென்றவர் அருகில்  காங்கிரஸ் களமாடும் மயிலாடுதுறைக்குச் போகவில்லை. திமுக போட்டியிடும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும்  ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அருகிலுள்ள காங்கிரஸ் தொகுதியான திருவள்ளூரைப் புறக்கணித்து விட்டார்.

இன்னும் சொல்லப் போனால் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை  போட்டியிடும் தொகுதிகளுக்கு எல்லாம் சென்ற கமல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகளில் ஒன்றில்கூட பிரச்சாரம் செய்யவே இல்லை.

இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த ‘தக்லைப்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் காங்கிரசை அதிர வைக்கும் விதமாக ஒரு தகவலை கூறியிருக்கிறார். அவரிடம் செய்தியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வட மாநிலங்களில் காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல், “தேவை இருந்தால் அவர்கள் அழைக்கும்போது கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என்று காங்கிரசை மறைமுகமாக கேலி செய்து இருக்கிறார்.

அதாவது கடந்த பிப்ரவரி மாதம் வடமாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்காக தீவிர பிரச்சாரம் செய்வேன் என்று கமல்ஹாசன் கூறியதற்கும் இப்போது அவர் காங்கிரஸ் அழைக்கும்போது கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் தென்படுகிறது.

அதாவது தேவை இருந்தால் என்கிறார். அப்படியென்றால் இதுவரை காங்கிரசுக்கு கமல்ஹாசன் தேவைப்படவில்லை என்று அர்த்தம் ஆகிறது. அடுத்ததாக அவர்கள் அழைக்கும் போது கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என்கிறார். இதன் மூலம் அவரை இதுவரை காங்கிரஸ் அழைத்ததாகவும் தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும். இதனால் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட வட மாநில இண்டியா கூட்டணி கட்சிகள் அவரை தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் அப்படி யாரும் விரும்பி கமலை அழைத்ததாக தெரியவில்லை.

தற்போது மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 285 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதனால் இனி யாரும் கமல்ஹாசனை அழைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அப்படியே கமல் பிரச்சாரம் செய்தாலும் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் போகலாம். அல்லது கிடைக்கக்கூடிய ஓட்டுகளை விழாமல் செய்யும் விதமாக அவருடைய பேச்சு சர்ச்சையாக அமைந்துவிட்டால் அதைவிட வேறு வினையே வேண்டாம் என்று அந்தக் கட்சிகள் நினைத்து அவரை அழைக்காமல் விட்டிருக்கலாம்.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான். “காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும், நடிகர் கமலுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. 2021 தமிழக தேர்தலில் குறைந்த தொகுதிகளையே ஒதுக்க அறிவாலயம் முன் வந்ததால் அதை ஏற்க விரும்பாத ராகுல், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதற்கே முதலில் விரும்பினார். இதனால் அதிர்ந்து போன திமுக தலைமை
20 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறிய நிலையில் கடைசியில் 25 இடங்களை கொடுத்தது. அதாவது கமல்ஹாசனின் பெயரை பயன்படுத்தி ராகுல் தந்திரமாக அதிக தொகுதிகளை பெற்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. இருந்தாலும் கூட கமல் அதையெல்லாம் மறந்து விட்டார்.

பின்னர் அரசியல் எதிர்காலம் கருதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை கமல் அளித்தார். அதோடு, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார்.

காங்கிரசுடன் கமல் இவ்வளவு நெருக்கம் காட்டியதால் இந்த மக்களவைத் தேர்தலில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 சீட்கள் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. திமுக நேரடியாக சீட் ஒதுக்கவில்லை என்றால் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது.

அதனால்தான் கடைசிவரை கமல்ஹாசனை அழைத்து திமுக  நேரடியாக பேச்சு நடத்தவில்லை. காங்கிரசுக்கு ஏழு தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன்வந்த திமுக, இறுதியில் புதுச்சேரியையும் சேர்த்து பத்துக்கு சம்மதித்தது. அதில் கமல்ஹாசனுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கவேண்டும் என்று திமுக கூறியதாக அப்போது தகவல் வெளியானது. மதுரை, பெரம்பலூர் தொகுதிகள் அவரது கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், காங்கிரசுக்குள் ஏற்பட்ட முட்டல் மோதல் காரணமாக அவர்களுக்கே 10 இடங்கள் போதாது என்ற நிலை ஏற்பட்டதால் கமலை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. இதனால் வேறுவழியில்லாமல், திமுக கமல்ஹாசனை அழைத்து மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக ஒப்பந்தம் செய்தது.

திமுக, அதிமுகவுக்கு எதிராக 2018ல் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல் வேறு வழி இன்றி திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்தார். கடைசியில் வைகோவின் மதிமுக போலவே கமலின் மக்கள் நீதி மய்யத்தின் கதையும் ஆகிப் போனது.

காங்கிரசுக்காக அகில இந்திய  அளவில் குரல் கொடுத்தவர்களில் கமலும் ஒருவர். காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இருக்கிறது  என்பதால்தான் தமிழகத்தை 
பொறுத்தவரை திமுக கூட்டணியில் அவர் இணைந்தார். அப்படி  நம்பியவரையே கைவிட்டதால்  காங்கிரஸ் மீது கமல் வெறுப்பாகிப் போனார். 

அந்தக் கோபத்தில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட எந்த தொகுதிக்கும் பிரச்சாரம் செய்ய அவர் போகவில்லை என்பது நிஜம்! அதே நிலைப்பாட்டை தெரிவிக்கும் விதமாகத்தான், தனக்கிருக்கும் மதிப்பு, மரியாதையை விட்டுக் கொடுக்காமல் காங்கிரஸ் அழைத்தால் வட மாநிலங்களுக்கு பிரச்சாரம் செய்ய செல்வேன் என்று இப்போது கமல் கூறியதையும் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காங்கிரசோடு இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை! என்று சொல்லாமல், கொள்ளாமல் கமல் ஒதுங்கிக் கொண்டதற்கு காரணம் புரிகிறது. ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 262

    0

    0