பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்… தொழில்முனைவோராக தொடர வாழ்த்து!!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2023, 1:56 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த ஷர்மிளா திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அதுவும் அன்று காலை திமுக எம்பி கனிமொழி, பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை பார்ப்பதற்காக பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது, பேருந்தில் டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்திருந்தார்.
இதற்கிடையில், கமல்ஹாசன் அவர்கள், பேருந்து ஓட்டுநர் பணியை துறந்த கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய காரை பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.
கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.