திமுகவுடன் கைகோர்க்கும் கமல்… சூடுபிடிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரம்…!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 5:51 pm

சென்னை : ஆளுநர் விவகாரத்தில் திமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. திராவிட அரசியலை ஆளும் கட்சி முன்னிறுத்தி வரும் நிலையில், ஆன்மீக அரசியலுக்காக ஆளுநர் குரல் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் வெளிப்படையாகவே ஆளுநரை எதிர்க்கத் தொடங்கி விட்டார்.

குறிப்பாக, நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பிய ஆளுநர் ரவி – திமுக அரசு இடையிலான மோதல் கொஞ்சம் குறைந்தது. இருப்பினும், துணைவேந்தர்கள் நியமனம் முதல் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு வரை என பல்வேறு சர்ச்சைகளும் அவ்வப்போது புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆளுநருக்கு எதிராக தற்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி 30-12-21 அன்று சட்டவிளக்கங்களோடு மநீம விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளார் ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மதிப்பளித்து விரைவில் ஆளுநர் அவர்கள் இத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

நியமனமுறை ஆளுநர் தேவையில்லை என்றும், குடியரசுத் தலைவரைப்போல தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்ற கருத்தாக்கத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மநீம முன்வைத்திருந்ததை நினைவுகூர்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவை தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையானது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!