எம்பி சீட்டுக்காக கட்சியை கைவிட்ட கமல்ஹாசன்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்பலம்!!
Author: Babu Lakshmanan20 February 2023, 8:18 pm
மய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும்போது அசாத்திய துணிச்சல் மிக்கவராகவும், அநீதியை எதிர்த்து போராடுபவராகவும் ஐக்கியமாகிவிடுவது வழக்கம்.
2018ம் ஆண்டு கட்சியை தொடங்கிய போது நிஜ வாழ்க்கையிலும் இப்படி மக்களுக்காக குரல் கொடுப்பேன் யார் பக்கமும் சாராமல் நடுநிலையாக செயல்படுவேன் என்றுதான் முழங்கினார்.
ஆனால் அடுத்த ஐந்தே ஆண்டுகளுக்குள் கமல் ஏன் இப்படி ஆகிப் போனார்? அரசியலில் அவருக்கு என்ன ஆச்சு? என்று தமிழக மக்களும், அவருடைய தீவிர ரசிகர்களும் கேள்வி கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.
பெரியாரின் பேரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது அப்படியே தலைகீழாக மாறிப்போய் விட்டார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிய கமல்ஹாசன், ‛‛பலமுறை யோசித்து தான் இங்கு வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்கவேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தேன். இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. இப்போது மய்யம் என்பது எந்த பக்கமும் சாயாமல் நடுவில் இருப்பது அல்ல. கொள்கைகளை ஒதுக்கிவிட்டு மக்களின் நலன் என வரும்போது எது நியாயமோ அதை செய்வதுதான் மய்யத்தின் லட்சியம். அதனை தான் செய்து கொண்டிருக்கிறேன். பல விமர்சனங்களை கேட்டுவிட்டு சரியான பாதை என்று தான் இங்கு வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் என் பாதை உங்களுக்கு புரியும். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதை விமர்சனம் செய்தவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை. நியாயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.
ஆபத்து காலத்தில் சின்னம், கட்சியை தாண்டியது தேசம் என்பதால் பரப்புரைக்கு வந்தேன்.
விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது, என்னை மிரட்டி தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார், ஒரு அம்மையார். மற்றவர்கள் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார்.
இப்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். அது என் பிரச்சனை என்பதால் நான் மறந்துவிட்டேன். இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன். மாற்றத்தை கொண்டு வரும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறேன். நானும் பெரியாரின் பேரன்தான்” என்று குறிப்பிட்டார்.
அவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவினரை கொந்தளிக்கவும் வைத்துள்ளது. அவர் சொன்னதை கூர்ந்து கவனித்தால் இரண்டு விஷயங்கள் புரியும்.
விஸ்வரூபம்
கமல் கட்சி தொடங்கியபோது “விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும் கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று” என ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு நேர் மாறாக சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதைப் போல அவருடைய தற்போதைய அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டது. அதாவது அதிமுகவும், திமுகவும் மக்களுக்கான கட்சிகள் அல்ல அந்த நிலையை மாற்றுவதற்காகவே புதிதாக கட்சி தொடங்குகிறேன் என்று கூறியவர் இன்று அப்படியே திமுக கூட்டணி பக்கம் ஒரேயடியாக சாய்ந்து விட்டார். பல விமர்சனங்களை கேட்டுவிட்டு சரியான பாதை என்றுதான் இங்கு வந்து இருக்கிறேன் என்கிறார். இதன் மூலம் நேர்மையும், துணிச்சலும் தனக்கு இப்போது இல்லை என்பதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம் ஆகிறது.
அடுத்ததாக, இன்று உயிருடன் இல்லாத முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அம்மையார் என்று குறிப்பிட்டு 2013ம் ஆண்டில் தனது நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தன்னை மிரட்டினார் என்று தேவையின்றி சீண்டியும்
இருக்கிறார்.
கமல் இப்படி கூறுவதன் மூலம் தன்னைத்தானே இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உயிருடன் இல்லாத ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவர் தன்னை மிரட்டினார் என்று சொல்வதை சிறு குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள். மரணம் அடைந்தவர் உயிருடன் திரும்பி வந்து மறுக்கப் போவதில்லை என்பதால் இஷ்டத்திற்கு கதை விடுகிறார் என்றுதான் நினைப்பார்கள்.
விஸ்வரூபம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த நாட்டை விட்டே வெளியேறும் எண்ணத்தை படத்தின் பிரச்னை எனக்கு ஏற்படுத்தி விட்டது என்று கோழைத்தனமாகத்தான் கமல் புலம்பினாரே தவிர, அதை எதிர்த்து போராட அவருக்கு எந்த துணிவும் அப்போது இல்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் ஜெயலலிதா இருக்கும் வரை கமல் இப்பிரச்சனை குறித்து வாயே திறக்கவில்லை.
மேலும் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் தடுப்பதற்கு போராடியவர்கள் யார் என்பதும் கமலுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதைப்பற்றி அவர் ஒருபோதும் மூச்சு விடவே மாட்டார்.
பெரியாரின் பேரன் என்று வீராப்பு பேசும் தைரியமான அரசியல்வாதி
என்றால் விஸ்வரூபம் படத்திற்கு யாரால், எதனால் சிக்கல் வந்தது? என்பதை கமல் மனம் திறந்து வெளியே சொல்லவேண்டும். இப்படி மழுப்பக் கூடாது.
அஜித்துக்கு துணிவு
இன்னொன்று. உண்மையிலேயே வீரம், தைரியம், போராட்டகுணம்
எப்போதும் தன்னிடம் உண்டு என்று பெருமை பேசும் நடிகர் கமல், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி இருந்தால் அவரை எவ்வளவோ பாராட்டி இருக்கலாம். ஆனால் அவர் இறந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகுதானே கட்சியே தொடங்கினார்?….இதை எப்படி துணிச்சலாக எடுத்துக் கொள்ள முடியும்?…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக கமல் தாக்கி இருப்பதன் மூலம் இனி எந்த தேர்தலிலும் அதிமுகவினர் அவருடைய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது.
“இந்த துணிவு விஷயத்தில் நடிகர் அஜித்தை எவ்வளவோ பாராட்டலாம்” என்று அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.
“ஏனென்றால் 2010-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் அவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் விழா எடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு மேடையில் பேசிய அஜித், ‘முதலமைச்சர் அய்யாவிற்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களிலும், சமூக பிரச்னைகளிலும் திரையுலகினர் தலையிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்படியொரு விஷயம் நடக்கும்பொழுது திரையுலகில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வரவழைக்கிறார்கள். அதனால்தான் நாங்களும் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்’ என்று தனது மனக்குமுறலை கொட்டினார்.
நடிகர் அஜித்தின் இந்த பேச்சை கேட்டவுடன் கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினி உடனடியாக எழுந்து நின்று கைதட்டினார். அஜித்தின் தைரியமான இந்த பேச்சு இன்று வரை திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது. ஏனென்றால் இந்த அளவிற்கு எந்த முதலமைச்சர் முன்பாகவும் தைரியமான பேச்சை வேறு எந்தவொரு நடிகரும் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை.
தேவைதானா..?
நடிகர் அஜித்தின் துணிச்சலான பேச்சுக்கு பின்பு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விஸ்வரூபம் வெளிவந்தது. அப்படி இருந்தும் கூட கமல் தனது படத்தின் சிக்கலுக்காக போராடாமல் கோழை போல்தான் முடங்கி கிடந்தார்.
கமலுக்கு முன்பாக 2005ல் நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கூட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் துணிந்து தனித்து போட்டியிடுகிறது. ஆடு, மாடுகளைப் போல வாக்காளர்களை திமுகவினர் தினமும் பட்டியில் அடைத்து வைத்து எதிர்க்கட்சியினரை வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கொந்தளிக்கிறார். ஆனால் ஈரோட்டில் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசனுக்கு இந்தப்பட்டியில் அடைப்பு விவகாரம் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக திகழ்வேன் என்று சபதம் எடுத்து கட்சி தொடங்கிய கமல் இதை கண்டித்திருக்க வேண்டாமா?… திமுக கூட்டணியில் ஒரு எம்பி சீட்டுக்காக தனது கட்சியையே அவர் கை கழுவி விட்டார் என்பதுதான் உண்மை.
அதனால்தான் வாக்காளர்களை திமுகவினர் சிறைபிடித்த விவகாரம் பற்றி கமல் வாயே திறக்கவில்லை”என்று அந்த அரசியல் நோக்கர்கள் கேலியாக குறிப்பிடுகிறார்கள்.
நடிகர் கமலுக்கு இது தேவைதானா?…