நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை… என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையல : இனிதான் ஆட்டம் ஆரம்பம்… கமல்ஹாசன் அதிரடி பேச்சு!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 4:37 pm

சென்னை : அரசியலில் பணம் சம்பாரிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். கட்சியின் சார்பில் ரத்த தான வங்கி சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அரசியலில் இருந்து விலகி விட்டதாக சொல்கின்றனர். சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான். ‛விக்ரம்’ படத்தின் வெற்றி என்பது ஒரு படிக்கட்டு தான். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை. படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை.

ஒன்றியம் என்பது குறித்து ஏதோ நான் ஒரு அரசியல் கட்சியை சாடுகிறேன் என சொல்கின்றனர். நான் அனைத்து ஒன்றியங்களையும் தான் சொல்கிறேன். தலைமையில் ஒரு கட்சி வந்துவிட்டால் ‛சலாம்’ போடுவதற்கு இது அரசாட்சி கிடையாது, இது மக்களாட்சி; கேள்விகள் கேட்கப்படும்.

அரசியல் என்பது ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல். உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரனாக இருப்பது போதாது. தெருவே சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். இதை நான் சொல்லும்போது யாருக்கும் புரியவில்லை. என்னைவிட்டால் ரூ.300 கோடி வசூலிப்பேன்; இதோ வந்துக்கொண்டிருக்கிறது.

இதைக்கொண்டு நான் என் கடனை அடைப்பேன், என் வயிறார சாப்பிடுவேன், என் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு கொடுப்பேன். அதன்பிறகு இல்லையென்றால் தைரியமாக சொல்வேன். எனக்கு ‛வள்ளல்’ பட்டத்தில் நம்பிக்கையில்லை. மனிதனாக இருப்பது போதுமானது. அரசியலில் நாங்கள் எங்கள் பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். எனக்கு தொழில்நுட்பம் இருக்கிறது, அவர்களிடம் வெறும் மேடை தான் இருக்கிறது. நான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. சினிமாவில் நடித்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்பதால் நடிக்கிறேன்.

கான்ட்ராக்டில் பணம் அடிக்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியத்தான் நடிக்கிறேன். இன்னொரு முறை ஏன் மறுபடியும் சினிமாவில் நடிக்க போனீர்கள் என கேட்காதீர்கள். ஏனெனில் நான் செலவு செய்யும் பணம் எல்லாம், கட்சிக்காக கொடுக்கும் தொகை எல்லாம் வருமான வரித்துறைக்கு தெரியும்.

எனவே நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இனிமேல் என்னை மிரட்ட வேண்டுமென்றால் என் அரசியல் பேச்சுகள் காரமாக இருக்கிறது என்பதற்காக மிரட்டலாம். ஏற்கனவே செய்தும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை சொன்னால் கோபம் வரும், என தெரிவித்துள்ளார்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!