கமல் குறி வைக்கும்3 தொகுதிகள்! திமுக கூட்டணியில் இழுபறி!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 9:16 pm

கமல் குறி வைக்கும்3 தொகுதிகள்! திமுக கூட்டணியில் இழுபறி!

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையும் என்று கடந்த மூன்று மாதங்களாக கூறப்பட்டு வந்தாலும் கூட இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இதற்கான காரணம், வெளிப்படையாக தெரிந்த ஒன்று. தமிழக காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒன்றை கமல் கட்சிக்கு கொடுத்து விடும்படி திமுக தலைமை முதலில் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் இதற்கு மக்கள் நீதி மய்யம் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் தனிக் கட்சி நடத்தி வருகிறோம். எங்கள் தலைவருக்கு ராகுல் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நட்பு இருப்பதால் அதனுடன் இதை இணைத்துப் பார்க்கக் கூடாது. எங்களை கூட்டணியில் இணைத்துக் கொண்டு தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்தால் மட்டுமே திமுக அணியில் சேருவோம் என்று அக்கட்சி திட்டவட்டமாக கூறிவிட்டது.

மேலும் மார்கழி மாதத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது அவ்வளவு உகந்ததாக இருக்காது என்பதால் திமுகவும், மக்கள் நீதி மய்யமும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தை மாத மத்தியில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே கமல் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிய ஒரு பட்டியல் அறிவாலயத்திடம் சமர்ப்பிக்கப்பட்டும் இருக்கிறது.

அதில் அவர் கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு இருக்கிறார். இதில் ஒரு தொகுதியை எப்படியும் திமுகவிடம் பெற்றுவிடவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.

2021 தமிழக தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனிடம் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டதாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கோவை தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகள் பெற்றதை மனதில் வைத்தும் இத்தொகுதியில் நின்றால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்பது கமலின் கணக்காக உள்ளது.

ஒருவேளை கோவை கிடைக்காவிட்டால் அவருடைய இரண்டாவது சாய்ஸ் ஆக மதுரை இருக்கிறது. 2018ல் மக்கள் நீதி மய்யத்தை நடிகர் கமல் மதுரையில்தான் தொடங்கினார். தவிர ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தனது படங்களில் மிக உயர்வாக காண்பித்து இருந்ததால் அவர்களின் கணிசமான வாக்குகளை அப்படியே அறுவடை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் மதுரையை அவர் திமுகவிடம் கேட்பதாக தெரிகிறது.

இந்த இரண்டு தொகுதிகளும் கிடைக்காத பட்சத்தில், தான் வசிக்கும் சென்னை நகரிலேயே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கினால் கூட போதுமானது என்று தென் சென்னையை கமல் கேட்டிருக்க வாய்ப்பும் உள்ளது.

அதேநேரம் கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணி பக்கம், சென்று விட்டதால் அந்தத் தொகுதியை கமல் கட்சிக்கு ஒதுக்க திமுக தயாராக இருக்கிறது. ஆனால் நடிகர் கமலோ கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தனது கட்சிக்கு ஒதுக்கிவிட்டு இரண்டாவது தொகுதியாக பெரம்பலூரை கொடுத்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவாலயத்திடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கோவை, மதுரை ஆகிய இரண்டு தொகுதிகளுமே தற்போது மார்க்சிஸ்ட் வசம் உள்ளது. அந்த தொகுதிகளை மார்க்சிஸ்ட் தலைவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

தவிர, சில தினங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியின் மார்க்சிஸ்ட் துணை மேயர் நாகராஜனை திமுகவை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் 6 பேர் வழிமறித்து தாக்கியதோடு, அவருடைய வீட்டையும், இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் தலைவர்களை சமாதானப்படுத்தவேண்டிய நெருக்கடிக்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில் மதுரை தொகுதியை கமலுக்கு ஒதுக்கினால் மார்க்சிஸ்ட் கட்சியின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் திமுக தள்ளப்படும். அதனால் கோவை, மதுரை இரு தொகுதிகளையும் அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவே திமுக மேலிடம் விரும்பும் என்பது வெளிப்படை.

“திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி என்று கூறப்படும் நிலையில் நடிகர் கமல் கோவை, மதுரை, தென் சென்னை தொகுதிகளை மட்டும் குறி வைப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் இந்த மூன்று தொகுதிகளிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமலுக்காக தீவிர களப்பணியில் இறங்கிவிட்டனர். வார்டுகள் வாரியாக பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்களை நியமித்தும் உள்ளனர். அவர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று சரிபார்த்தும் வருகின்றனர்.
குறிப்பாக கோவை, மதுரை தொகுதிகளில் இவர்கள் பம்பரமாய் சுழன்று செயல்பட்டும் வருகின்றனர்.

ஏனென்றால் தென் சென்னை தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக ஒருபோதும் சம்மதம் தெரிவிக்காது என்பது கமல் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும்.

மேலும் கோவை, மதுரை தொகுதிகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அவர்கள் செலவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல் போட்டியிட விரும்பும் மூன்று தொகுதிகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை என்றால் இதுவரை செலவழித்த பணம் முழுவதும் வீணாகப் போய்விடுமே என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

பெரம்பலூரை திமுக கொடுத்தால் அதை மக்கள் நீதி மய்யம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவே செய்யும். அதேநேரம் கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய மூன்றில் ஒன்றை கமலுக்காக கட்டாயம் எதிர்பார்க்கவும் செய்வார்கள்.

என்றபோதிலும் பெரம்பலூரை விட மற்ற மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்று கிடைத்தால் கூட போதும் என்ற மனநிலையில்தான் மக்கள் நீதி மய்யம் உள்ளது.
ஏனென்றால் நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு பின்பு, அவருடைய மனைவியும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினார். திமுகவும் அவருடன் திரை மறைவில் பேச்சு நடத்தியது.

விஜயகாந்தின் இறுதி சடங்கில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதை மனதில் வைத்து தங்கள் கட்சி பழைய நிலையை அடைந்து விட்டதாக எண்ணி திமுக தலைமையிடம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் என மூன்று தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்.பி.பதவியையும் அப்போது தேமுதிக கேட்டுள்ளது.

ஆனால் திமுகவோ, எங்களது கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் உள்ளன. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் எங்களால் தொகுதிகளை ஒதுக்க முடியாது. வேண்டுமென்றால் ஒரேயொரு தொகுதி தருகிறோம் என்று கூறியுள்ளது. இதனால்தான் திமுக அரசை பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் கடுமையாக தாக்கி பேசத் தொடங்கி இருக்கிறார் என்பதையும், அவருடைய பார்வை தற்போது அதிமுக, பாஜக கட்சிகளை நோக்கி திரும்பி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

நடிகர் கமல் அதிமுகவையும், பாஜகவையும் மிகக் கடுமையாக எதிர்ப்பதால் அவர் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில்தான் ஆர்வம் காட்டுவார். ஒருவேளை, தான் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை என்றால் அவர் திமுகவிடம் ராஜ்ய சபா எம்பி கேட்டு பெறுவதற்கான வாய்ப்பே அதிகம். அதுவும் கிடைக்கவில்லை என்றால் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமா என்பதே சந்தேகம்தான்”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தனது அரசியல் எதிர்காலத்தை விட சினிமா வாழ்க்கை பற்றியே நடிகர் கமல் மிகுந்த கவனம் கொண்டு இருப்பதால் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதுதான் நிஜம்!

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!