பணம் ஈட்டுவதையே குறிக்கோளாய் வைத்துள்ளார் கமல்… பொசுக்குனு ம.நீ.ம.வில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்… பாஜகவில் ஐக்கியமாக திட்டம்…!!
Author: Babu Lakshmanan26 May 2022, 1:19 pm
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அவருக்கு பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், அதனை அவர் சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாகத்தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக, கடந்த உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது.
இனியும் இந்தக் கட்சியில் இருந்தால், அரசியலில் நமக்கு எதிர்காலம் இல்லை என்று கருதிய மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி பத்மபிரியா, தலைமை நிலைய பொதுச்செயலராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போன்றோர் வெளியேறினர். மேலும், அவர்கள் விலகும் போது கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையச் செயலராக இருந்த சரத்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜனநாயக ரீதியாக கட்டமைக்கப்பட்ட, ஓர் அரசியல் அமைப்பான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், தலைவர் கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன். தலைவரின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 21,139 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தேன். அதன் பின்னர் எனக்கு மாநிலச் செயலர் பொறுப்பு வழங்கினார்.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது. அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாகக் குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டுபோய் சேர்க்கமுடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன், என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சரத்பாபு இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.