43 நாட்களுக்குப் பிறகு சாம்சங் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

Author: Hariharasudhan
15 October 2024, 6:55 pm

சுமார் 43 நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம், கங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினர்.

இப்பேச்சு வார்த்தையின் முடிவில், சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக்.15) தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்படி, நிர்வாகத் தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி,

  1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
  2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
  3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
  4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறான அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ