பேனா, பேப்பர் வாங்க ரூ.50 லட்சமப்பே.. கார் வாங்க ரூ.15 லட்சம்.. திமுக சார்பில் வெற்றிபெற்ற நகராட்சி தலைவரின் அதிரடி பட்ஜெட்.. வாயடைத்துப்போன கவுன்சிலர்கள்…!!
Author: Babu Lakshmanan31 March 2022, 5:21 pm
திருப்பூர் : பேனா, பேப்பர் வாங்க ரூ.50 லட்சமும், தலைவரின் பயன்பாட்டிற்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும் காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – காங்கேயம் நகராட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், நகராட்சி தலைவர் பதவி, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்தது போன்று, திமுகவினரே இந்தத் தலைவர் பதவியை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதாவது, திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்ட சூரிய பிரகாஷ் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்தனர்.
மேலும், கூட்டணி கட்சிகள் அளித்த அழுத்தத்தின் காரணமாக,கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், சூரிய பிரகாஷ் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து திமுக தலைமை அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.
இதை தொடர்ந்து, 16 உறுப்பினர் கொண்ட காங்கேயம் நகராட்சி கூட்டம் ஆணையர் வெங்கடேஸ்வரன் தலைமையில் இன்று நடந்தது. 20 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ரூ.98.97 கோடியே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ் பயன்படுத்துவதற்காக ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும், பேப்பர், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வாங்க ரூ 50 லட்சத்துக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களிடையே வாயடைக்கச் செய்யும் அளவிற்கு இருந்தது.