சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் கனிமொழி.. திமுக துணை பொதுச்செயலாளராக அறிவிப்பு : மகளிர் அணி பொறுப்பு யாருக்கு?
Author: Udayachandran RadhaKrishnan9 October 2022, 12:00 pm
திமுக பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. இதில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அப்போது கனிமொழி துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தற்போது மகளிர் அணி செயலாளராக உள்ள நிலையில் அப்பதவிக்கு புதியதொரு நபர் தேர்வாகும் வரை கனிமொழி கூடுதல் பொறுப்பாக மகளிரணி செயலாளர் பொறுப்பையும் ஏற்பார் என தெரிகிறது.
கனிமொழிக்கு கிடைத்த பதவியானது சாதாரண பதவி அல்ல. உயர் பதவிகளில் ஒன்றானது. அதிகாரமிக்கது. இது போன்ற உயர் பதவிகளை கனிமொழி எதிர்பார்க்காவிட்டாலும் அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இன்று வெளியான அறிவிப்பால் கனிமொழியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திமுக துணை பொதுச் செயலாளராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் திமுகவிலிருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
அதே வேளையில் திமுக மளிர் அணி செயலாளராக கனிமொழி இருந்து வரும் நிலையில், தற்போது அவருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக கொள்கையில் ஒருவருக்கு ஒரு கட்சி பொறுப்பு என்பதால் இனி மகளிர் அணி செயலாளர் பதவி காலியாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.