கனிமொழி, திருமா எப்போ ராஜஸ்தான் போவாங்க?…சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தால் கிடுக்குப்பிடி கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2023, 9:42 pm

பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடந்தாலும் அங்கு முதல் ஆளாக பெண்ணுரிமை போராளியாக களம் இறங்கும் கனிமொழி எம்பிக்கும், எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உரக்க குரல் எழுப்புவதாக கூறிக் கொள்ளும் திருமாவளவனுக்கும் மணிப்பூரைத் தொடர்ந்து இன்னொரு மாநிலத்திற்கும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குழுவுடன் அவசரமாக செல்லவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

மணிப்பூர் உச்சம்

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கிய கலவரம் அடுத்த இரண்டு மாதங்களில் உச்சம் பெற்று தற்போது சற்று தணிந்துள்ளது.

இந்த வன்முறையின்போது இரு பெண்கள் ஒரு குழுவினரால் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டதுடன் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறிய மணிப்பூர்

பாஜக ஆளும்கட்சியாக உள்ள மாநிலத்தில் இந்த வன்முறை சம்பவங்கள் நடந்ததால் காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அதை தங்களுக்கு கிடைத்த ஒரு ஆயுதமாக கையில் எடுத்தன.

கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் 21 எம்பிக்கள் இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் கடந்த 29 ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு சென்றனர். இந்தக் குழுவில் திமுக சார்பில் கனிமொழி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சென்றிருந்தனர்.

கனிமொழி, திருமா பேட்டி

பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய கனிமொழி, “மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என்பதுதான் உண்மை. முகாமில் மக்களை நாங்கள் சந்தித்துவிட்டு வந்தபோது வழியில் பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு அப்போதுதான் துப்பாக்கி சூடு நடந்ததாக கேள்விப்பட்டோம். முகாமில் இருக்கும் மக்கள் வீடு திரும்புவதற்கான சூழல் அங்கு இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் அச்சத்துடன்தான் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

திருமாவளவன் கூறும்போது, “மணிப்பூரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிபோல் இருப்பது பரிதாபத்துக்குரியது. இரு சமூக மக்களும் மத்திய, மாநில அரசுகளை குறை கூறத்தான் செய்கிறார்கள். அங்கு இன்னும் வன்முறை நடக்கத்தான் செய்கிறது. சுமுக நிலை வரவில்லை” என்று தெரிவித்தார்.

மணிப்பூர் செல்வதற்கு முன்பாக அந்த மாநிலத்தில் நடந்த வன்செயல்கள் குறித்து கனிமொழியும், திருமாவளவனும் கோபம் கொப்பளிக்க, கொந்தளித்து மோடி அரசை வன்மையாக கண்டிக்கவும் செய்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

மெழுகுவர்த்தி ஊர்வலம்

எந்த மாநிலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு முதல் நபராக குரல் கொடுப்பவர் என்ற தனித்துவம் கனிமொழிக்கு உண்டு. 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னுமிடத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அப்போது திமுக மகளிர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோருடன் கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருமாவளவனோ “சாதிவெறி, காம வெறி ஆகியவற்றுக்கு அடிப்படையான
மத வெறி, ஆணாதிக்க வெறி போன்றவற்றின் கேவலமான வெளிப்பாடுகளே உபியில் பட்டியலின சிறுமிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமையாகும். கொடூரமான வல்லுறவு, குரூரமான படுகொலை போன்ற இவ்வன்முறை வெறியாட்டம், மனித குலத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது” என்று ஆவேசமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தியது போல மீண்டும் ஒரு வாய்ப்பு கனிமொழிக்கு கிடைத்திருக்கிறது. அதேநேரம் அதில் அவர் ஆர்வம் காட்டுவாரா?.. என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்

ஏனென்றால் நாட்டிலேயே சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக அதிகமாக நடக்கும் முதல் மாநிலமாக திகழும் ராஜஸ்தானில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடுகளை மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் ஆறு பேர் கொண்ட காமக்கொடூர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். அது மட்டுமல்ல அந்தச் சிறுமியின் உடலை செங்கல் சூளைக்குள் போட்டு எரித்து கைப்பிடி சாம்பல் கூட கிடைக்காத நிலையை அந்த படுபாதக கும்பல் ஏற்படுத்தி விட்டது.

பில்வாரா நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள கோட்டி என்ற கிராமத்தின் வயல் வெளிப்பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆடுகளை மேய்க்கச் சென்ற தனது தங்கையை காணவில்லையே என்ற பதைபதைப்பில் தேடிய அண்ணனின் கைகளில் சிக்கியது என்னவோ அவளது வெள்ளி வளையல்கள்தான். அதன் பிறகே அவள் செங்கல் சூளைக்குள் திணித்து எரிக்கப்பட்ட விஷயமே அண்ணனுக்கு தெரிய வந்தது.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் உதய்ப்பூர், பிரதாப்கார் மாவட்டங்களில் இதுபோல மேலும் மூன்று சிறுமிகள், இரண்டு பெண்கள் என ஐந்து பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான்.

காங்., ஆட்சிக்கு தலைவலி

இது ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகள் பிரியங்கா ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருபவர்தான் அசோக் கெலாட். அப்படி இருந்தும் கூட மாநிலத்தில் அன்றாட நிகழ்வுகளாக மாறிப்போன சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் காங்கிரஸ் அரசு திணறி வருகிறது.

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தாலும் கூட தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள், காட்சி ஊடகங்கள் இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்றதொரு கொடுமையான சம்பவம் நடந்துவிட்டால் இங்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் அத்தனையும் கொதித்து எழுந்து விடும். உடனடியாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஊர்வலங்களும் அரங்கேறும். அது போட்டி போட்டுக் கொண்டு செய்தி சேனல்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படும்.

கண்டுகொள்ளாத தமிழகம்

அதேநேரம் ராஜஸ்தானில் தினமும் சராசரியாக 18 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 16 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர். அது மட்டுமல்ல பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதிலும் ராஜஸ்தான் மாநிலம்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இதை தமிழகத்தில் யாரும் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டது போலவே தெரியவில்லை.

“பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் உடனே தனது கண்டன குரலை பதிவு செய்யும் திமுக எம்பி கனிமொழியும், பட்டியல் இன மக்களுக்காக என் உயிரையும் அர்ப்பணிப்பேன் என்று கூறும் திருமாவளவனும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் குழுவுடன் சென்று அடுத்து ஆய்வு செய்யும் மாநிலம் ராஜஸ்தான் ஆகத்தான் இருக்க வேண்டும்” என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ராஜஸ்தானுக்கு செல்வார்களா கனிமொழி, திருமா?

“அதேநேரம் கனிமொழியும் திருமாவளவனும் அது போன்றதொரு விபரீத முயற்சியில் இறங்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அதனால் எந்த கட்சியின் ஆட்சி ஒரு மாநிலத்தில் நடக்கிறது என்பதைப் பொறுத்தே கனிமொழியும், திருமாவளவன் ஓங்கி குரல் கொடுப்பார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலம் என்றால் கருத்தே தெரிவிக்காமல் கமுக்கமாக ஒதுங்கிக் கொள்வதும் அவர்களின் வழக்கம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு இதுவரை இவர்கள் இருவரும் ஆறுதல் கூறியதாக தெரியவில்லை.

கனிமொழி நிகழ்ச்சியிலே பாலியல் சீண்டல்

இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே ஒரு பாலியல் சீண்டல் சம்பவம் நடந்தது.

அவருடைய கூட்டத்தின் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 22 வயது
பெண் காவலர் ஒருவரை, திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர். அந்தப் பெண் காவலர் கண்ணீர் விட்டு அழுதவாறு தனது மேலதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவித்தபோது, அந்த இளைஞர்கள் இருவருமே பெண் காவலர் மீது தெரியாமல் எங்களது கைகள் பட்டுவிட்டது என்று கூறி சமாளித்தனர்.

அப்போது அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா போலீஸ் அதிகாரிகளை சமாதானப்படுத்தி இளைஞர்கள் இருவரையும் விடுவித்து உடனே வீட்டுக்கும் அனுப்பி வைத்தார். தான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்
இப்படியொரு சம்பவம் நடந்ததை கனிமொழி எம்பி கண்டும் காணாததுபோல் இருந்து விட்டார். ஆனால் எம்எல்ஏ தலையிட்ட விவகாரம், ஆங்கில செய்தி சேனல்களில் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பான பின்பு, மூன்று நாட்கள் கழித்தே திமுக இளைஞரணியை சேர்ந்த அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

எப்படி ராஜஸ்தான் செல்வார்?

இப்படி தனது கூட்டத்தில் நடந்த கொடுமையையே தட்டி கேட்க துணிவும், தைரியமும் இல்லாத கனிமொழியா ராஜஸ்தான் மாநிலத்துக்கு திருமாவளவன் எம்பியுடன் செல்வார்?…இது பேசுவதற்கும் எழுதுவதற்கும் வேண்டுமென்றால் நன்றாக இருக்கலாம். அதையெல்லாம் பெண்ணியப் போராளி என்று திமுகவினர் வர்ணிக்கும் கனிமொழியிடம் எதிர்பார்க்கவே கூடாது. ராஜஸ்தானில் 14 வயது சிறுமி காம கொடூரர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டது நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என கனிமொழி அப்படியே கடந்து போய்விடும் வாய்ப்புகளே அதிகம்.

ஏனென்றால் அந்த மாநிலத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்பதும், அம்மாநில முதலமைச்சர் சோனியா, பிரியங்கா போன்ற பெண் தலைவர்களின் ஆசி பெற்றவர் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் இந்த சிறுமியின் கொடூர கொலைக்கு கனிமொழி குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பதெல்லாம் வீண்.

திருமாவளவன் கேட்டாலும் கேட்பார்

திருமாவளவனோ இந்தியாவில் ராஜஸ்தான் என்று ஒரு மாநிலம் இருக்கிறதா?…அங்கு காங்கிரஸ் ஆட்சியா நடக்கிறது? என்று எதிர் கேள்வி கேட்டாலும் கேட்பார்.

எந்தக் கட்சியின் ஆட்சியில் இது போன்ற அவலம், கொடுமை நடந்தாலும் அதை கண்டிப்பதுதான் நல்ல தலைவர்களுக்கு அழகு. ஜீரணிக்க முடியவில்லையென்றால் தோழமையின் சுட்டுதல் என்று சொல்வார்களே அதுபோல கூட கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் அதுமாதிரி கூட எதுவும் கூறியதாக தெரியவில்லை “என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் மன வேதனையும் ஆதங்கமும் நியாயமாகத்தான் தோன்றுகிறது!

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 365

    0

    0